×

ராமநாதபுரம் உழவர் மையத்தில் நீரா பானம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ராமநாதபுரம், நவ.6: ராமநாதபுரம் வட்டார உழவர் மையத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சொர்ண மாணிக்கம் தலைமையில் தென்னை நீரா பானம் மதிப்பு கூட்டுதல் பயிற்சி விவசாயிகளுக்கு நடந்தது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சேக்அப்துல்லா, தென்னை விவசாயிகளிடம் நீரா பானம் தயாரித்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றியும், நீரா பானம் உடலுக்கு உகந்தது, வெயிலுக்கு இதமானது. தென்னை விவசாய ஆர்வலர் குழுக்கள் அனைவரும் ஒன்று கூடி நீராபானம் தயாரித்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பொருட்களை உற்பத்தி செய்து பயனடையலாம் என்று விவசாயிகளிடம் கூறினார். வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் (பொ) பரமக்குடி செல்வம், கூட்டுப்பண்ணைய திட்டத்தின் மூலம் தென்னை விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் நீராபானம் தயாரித்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் பொருட்களை உற்பத்தி செய்து வருமானத்தை பெருக்கி கொள்ளலாம். விவசாயிகள் பயிற்சி மற்றும் பட்டறிவு பயணங்கள் ஏற்பாடு செய்து தரப்படும் என விவசாயிகளிடம் கூறினார். வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் எஸ்தர், தென்னை, பனை பதனீரில் இருந்து கருப்பட்டி தயார் செய்யும் முறை குறித்து நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டதார்.. தென்னையில் வெள்ளப்பாகு தயாரித்து இறுதியில் கருப்பட்டியாக்கும் தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கூறினார். உதவி பேராசிரியர் பாலாஜி, தென்னையில் அனைவரும் மண் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு உரமிடவேண்டுமென்றும், தென்னை சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கூறினார். இப்பயிற்சியில் சக்கரக்கோட்டை உழவர் உற்பத்தியாளர் குழு தென்னை விவசாயிகள் தேவிபட்டினம் மற்றும் கழுகூரணி விவசாயிகள் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், சேகர் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி நன்றி கூறினார்.

Tags : Ramanathapuram Farmer Center ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை