×

20 ஆண்டுகளுக்கு பிறகு சுகாதாரமற்ற நிலையில் வாசுகி தீர்த்த குளம்

பரமக்குடி, நவ.6:  பரமக்குடி அருகே நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளத்தின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி திருக்கோயில் உள்ளத. தென்னாட்டில் முகம்மதியர் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் முல்லா சாகிப் என்ற மன்னன், வாய் பேச இயலாத தன் மகளுடன் நயினார்கோவில் நாகநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்துள்ளார். கோவில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடிவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வருகை தந்தபோது, ‘அல்லா நயினார் ஆண்டவர்’ என்று வாய் திறந்து பேசினாளாம் மன்னரின் மகள். இதனால் அன்று முதல் இந்தக் கோயில், ‘நயினார் கோவில்’ என வழங்கலாயிற்று என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தை சேர்ந்த நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தோஷ நிவர்த்திக்காக வருடம் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். உடலில் காணப்படும் அரும்பாறை மற்றும் நாக தோஷம் நீங்குவதற்காவும் பக்தர்கள் இங்கு வந்து வாசுகி தீர்த்த குளத்தில் நீராடி விட்டு, சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

கோவிலுக்கு எதிராக அமைந்துள்ள வாசுகி தீர்த்த குளம் கடும் வறட்சி காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரின்றி வறண்டு காணபட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செய்து விட்டு, அருகிலுள்ள போர்வெல் குழாயில் குளித்து சென்றனர். தண்ணீர் இல்லாததால், குளம் கழிவுநீர் குட்டையாக காணப்பட்டது. மேலும் குளத்தின் படிக்கட்டுகள் சேதமடைந்து, பராமரிப்பு இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் பக்தர்கள், பொதுமக்கள் என பலரும் நீராட முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தொடர் கனமழையால், வாசுகி தீர்த்த குளத்தின் முழு கொள்ளளவு நிரம்பி, குளம் கடல் போல் காட்சியளிக்கிறது. குளத்தில் குடிதண்ணீர் பாட்டில்கள், மதுபாட்டில்கள் என குப்பைகள் மிதப்பதால் சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது. இதனை கண்டு பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ள வாசுகி தீர்த்த குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி, குளத்தின் புனிதத்தை பாதுகாக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vasuki Tirtha ,pool ,state ,
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...