×

பாம்பன் குந்துகால் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

ராமேஸ்வரம், நவ. 5: பாம்பன் குந்துகால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டதால் பாம்பன் ஊராட்சியில் மட்டும் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுக்கடைகளையும் அகற்றி மதுக்கடை இல்லாத பகுதியாக ராமேஸ்வரத்தை அறிவிக்க வேண்டும் என பொதுமக்களும், தன்னார்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாம்பனில் இயங்கி வரும் மூன்று டாஸ்மாக் கடைகள் போக ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் மதுவிற்பனையும், 130க்கும் மேற்பட்ட நபர்களும் மதுவிற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அனுமதியோடு மூன்று டாஸ்மாக் கடை என்றால், ராமேஸ்வரம் சரகம் காவல் துறையினரின் ஆசியோடு சட்டத்திற்கு புறம்பான மது விற்பனையும் நடந்து வருகிறது. இதனால் தீவில் வசிக்கும் மீனவர்கள், தினக்கூலிகளின் வருவாய் மதுவினால் கபளீகரம் செய்யப்படுவதுடன் பள்ளி மாணவர்கள், இளைஞர்களின் வாழ்க்கையும் சீரழிந்து வருகிறது.

மக்கள் நலன் கருதி இதனைத் தடுத்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் நிலையில் தற்போது புதிதாக பாம்பன் குந்துகால் பகுதியில் மேலும் ஒரு டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், கடை வைக்க இடம் பார்க்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையால் இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாம்பனில் புதிதாக மதுக்கடை திறக்கும் முடிவை கைவிடவும், மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் வேண்டியும் பாம்பன் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து தரவைத்தோப்பு, அக்காள்மடம், அய்யன்தோப்பு, குந்துகால் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திடவும் திட்டமிட்டு வருகின்றனர்.

Tags : task force shop ,Bombay ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!