×

புதிய இணைப்பு வழங்க 50 ஆயிரம் லஞ்சம் குடிநீர் வாரிய பெண் அதிகாரி கைது : சிந்தாதிரிப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு மெட்ரோ குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை குடிநீர் வாரிய அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளது.
அதுமட்டுமின்றி  அனைத்து அலுவலகங் களிலும் அதிகாரிகள், குடிநீர் இணைப்பு கேட்டு வரும் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறாமல், தரகர்கள் மூலம் பெற்று, லஞ்சம் கொடுத்தால் மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், புதிய வீட்டிற்கு மெட்ரோ குடிநீர் இணைப்பு பெறுவதற்கு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு தலைமை அலுவலகத்திற்கு ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளராக இருந்த விஜயகுமாரி, வீட்டிற்கு புதிய இணைப்பு வழங்க வேண்டும் என்றால், தனக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இணைப்பு வழங்க முடியாது, என்று கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிப்பு அலுவலக பெண் அதிகாரி மீது, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார் அளித்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். திட்டமிட்டப்படி அந்த நபர் நேற்று தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு பெண் பொறியாளர் விஜயகுமாரியை சந்தித்து மெட்ரோ குடிநீர் இணைப்புக்காக ரசாயனம் தடவிய ₹50 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அப்போது அலுவலகத்தில் சாதாரண  உடையில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பொறியாளர் விஜயகுமாரியை கையும் களவுமாக பணத்துடன் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெட்ரோ குடிநீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு மைய தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sindathiripettai ,
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...