×

ஈஞ்சம்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற ₹3 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், காவலர் கைது

சென்னை, மே 15: ஈஞ்சம்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த ₹3 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் மற்றும் காவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் வெட்டுவாங்கேணி பகுதியில் 40 அடி இணைப்பு சாலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இணைப்பு சாலையை 13 பேர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வசித்து வந்தனர். இந்நிலையில், கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன் தங்கம் என்பவர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சோழிங்கநல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலரிடம் புகார் அளித்தார்.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சமூக ஆர்வலர் பொன் தங்கம் கடந்த 2023ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பொன் தங்கம் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு மாநகராட்சி தெற்கு வட்டார இணை ஆணையர் அமீத்திடம் மனு கொடுத்தார். இந்த மனுவை பரிசீலித்த இணை ஆணையர் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் சரோஜாவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தாசில்தார் சரோஜா சமூக ஆர்வலர் பொன் தங்கத்தை தனது வீட்டுக்கு அழைத்து சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ₹1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.

அதற்கு, பொன் தங்கம் ஒத்துக் கொள்ளாததால் இறுதியாக ₹20 லட்சம் கொடுத்தால் நீதிமன்ற உத்தரவின்படி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாக கூறி அதற்கு முன்பணமாக ₹3 லட்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன் தங்கம், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுக்களை தாசில்தாரிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்படி, நேற்று மாலை அடையாறில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு பணத்துடன் சென்ற பொன் தங்கம் அங்கு தாசில்தார் சரோஜாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சரோஜா வெளியே இருக்கும் ஓட்டுனர் அருணிடம் பணத்தை கொடுத்து விட்டு அவரை மட்டும் மேலே வருமாறு கூறியுள்ளார். சரோஜா கூறியதன்பேரில் பொன் தங்கம் அந்த நபரிடம் ₹3 லட்சம் கொடுத்தார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை காவல் துறையில் பரங்கிலை குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் காவலர் அருண் என்பதும், தனக்கு தெரிந்தவரும் ரிசர்வ் போலீசில் பணியாற்றி வரும் பிரவீன் என்பவர் பணம் வாங்க அவரை அழைத்ததின்பேரில் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அருணை கைது செய்ததை அடுத்து பிரவீன் அங்கிருந்து தலைமறைவானது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் போலீசார் அருண் அளித்த தகவலின்பேரில் பெண் தாசில்தார் சரோஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவான சரோஜாவின் கணவர் பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ₹3 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் மற்றும் காவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஈஞ்சம்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற ₹3 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், காவலர் கைது appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Eenchampak ,Chennai ,Eenchambakkam ,Einjambhak ,
× RELATED தாசில்தாரின் கார் மோதி வாலிபர் பலி