×

வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சென்னை: வட சென்னையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது, என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை மாவட்டத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக உள்ள வைப்பு அறைக்கு அனுப்பிவைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்குப்பதிவிற்கான 4469 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4469 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 4842 வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் சிந்தாதிரிப்பேட்டை வைப்பு அறையிலிருந்து அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் வைப்பு அறைகளுக்கு காவல்துறையின் பாதுகாப்போடு அனுப்பி வைக்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த இயந்திரங்கள் வீடியோ கண்காணிப்பு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இருப்பு இயந்திரங்கள் வைப்பு அறையிலேயே வைக்கப்படும்.

வடசென்னையில் 23 வேட்பாளர்கள், தென்சென்னையில் 20 வேட்பாளர்கள், மத்திய சென்னையில் 9 வேட்பாளர்கள் என மொத்தம் நேற்று முன்தினம் வரை 52 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ஏற்பட்ட பிரச்னை குறித்த கேள்விக்கு, வேட்பு மனு தாக்கல் செய்யும் போது டோக்கன் அடிப்படையில் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க 6 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் உள்ளனர். மேலும், தேர்தல் பணிகளை கண்காணிக்க வடசென்னையில் கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, மத்திய சென்னையில் சுரேஷ், தென் சென்னையில் முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் பொது பார்வையாளர்களாகவும், காவல் பணிகளை கண்காணிக்க வடசென்னையில் உதய் பாஸ்கர் பில்லா, மத்திய சென்னை மற்றும் தென்சென்னையில் சஞ்சய் பாட்டியா, தேர்தல் காவல் பார்வையாளர்களாகவும் தேர்தல் பணிகளை கண்காணிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

* ரூ.7,83,50,375 பறிமுதல்
தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களின் மூலம் ரூ.2,35,89,600, ரூ.5,32,60,775 மதிப்பிலான 8046.45 கிராம் தங்கம், ரூ.15,00,000 மதிப்பிலான 12 ஐபோன்கள் என மொத்தம் ரூ.7,83,50,375 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Election ,Chennai ,District Election Officer ,Radhakrishnan ,Chennai district ,Sindathiripettai ,
× RELATED வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது