×

பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்

சென்னை, மே 15: பிளஸ் 1 பொதுத் தேர்வில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் 80.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் 1.20 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2023-24ம் கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வில் 2,471 மாணவர்கள், 3,136 மாணவியர் என மொத்தம் 5,607 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,754 மாணவர்கள் (70.98%), 2,736 மாணவியர் (87.24%) என மொத்தம் 4,490 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 80.08 சதவீதம் ஆகும்.

கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3, கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 2, வணிகவியல் பாடப்பிரிவில் 1, இயற்பியல் பாடப்பிரிவில் 1 என 7 மாணவ, மாணவியர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 5 இடங்கள் பெற்ற பள்ளிகளின் அடிப்படையில், புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அத்திப்பட்டு சென்னை மேல்நிலைப் பள்ளி 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், அயனாவரம் சென்னை மேல்நிலைப்பள்ளி 600க்கு 573 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும், எம்.எச். சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று 4ம் இடத்தையும், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 600க்கு 569 மதிப்பெண்கள் பெற்று 5ம் இடத்தையும் பெற்றுள்ளன.

தேர்ச்சி சதவீத அடிப்படையில், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 96.10 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், அப்பாசாமி தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி 94.74 சதவீத தேர்ச்சியுடன் 2ம் இடத்தையும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 94.61 சதவீத தேர்ச்சியுடன் 3ம் இடத்தையும், எம்.எச்.சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.36 சதவீத தேர்ச்சியுடன் 4ம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 93.24 சதவீத தேர்ச்சியுடன் 5ம் இடத்தையும் பெற்றுள்ளன. மதிப்பெண்கள் அடிப்படையில் 25 மாணவ, மாணவியர்கள் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 111 மாணவ. மாணவியர் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 254 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

The post பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation School ,Chennai Corporation Education Department ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்