×

ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை

சென்னை, மே 14: ஷேர் மார்க்கெட்டிங் மூலம் இரட்டிப்பு லாபம் பெறலாம், என டெலிகிராம் செயலி மூலம் காவலரிடம் ₹37 ஆயிரம் பெற்று மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு வடிவங்களில் பொதுமக்களிடம் இருந்து மர்ம கும்பல், பணத்தை அபகரித்து வருகிறது. குறிப்பாக, இணையவழியாக பண மோசடி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. செல்போனுக்கு வரும் குறிப்பிட்ட லிங்க்குகளை தொட்டு தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் இழக்கின்றனர். மேலும் விதவிதமான முறைகளில் பொதுமக்களை மர்ம கும்பல் ஏமாற்றி அவர்களின் பணத்தை பறித்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து செயல்படும் இந்த கும்பலை பிடிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது.

இந்நிலையில், காவலர் ஒருவரிடமே இதுபோன்ற மோசடி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜா (33). இவர், காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 11ம் தேதி டெலிகிராம் செயலி மூலம் லிங்க் ஒன்று வந்தது. அதில், ஷேர் மார்க்கெட்டில் ஷேர் வாங்கி லாபம் பெறலாம், என்று வந்தது. அந்த லிங்கில் காவலர் ராஜா உள்ளே சென்று அதில் உள்ள செல்போன் எண்ணிற்கு, அமேசான் பே என்ற ஐடியில் முதலில் ₹5 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

அப்போது அவருக்கு சிறிய தொகை லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வந்தது. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் ₹32 ஆயிரம் அனுப்பியுள்ளார். அப்போது மேலும் ₹1,08,000 பணம் அனுப்பினால் உங்களுக்கு லாப பணம் ₹2.10 லட்சம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், தன்னுடைய ₹37 ஆயிரத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு ஷேர் மார்க்கெட்டில் உள்ள பெண் ஒருவர் ‘நீங்கள் டாஸ்க் முடிக்காமல் விட்டதால் உங்கள் பணத்தை தர முடியாது என்று டெலிகிராம் செயலி குழுவில் தெரிவித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காவலர் ராஜா, உடனே ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் டெலிகிராம் செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்