×

250 ஏக்கர் பாசன வசதி பெறும் தவளைக்குளம் கண்மாய் உடைந்து வீணாக ெவளியேறும் தண்ணீர் வேதனையில் விவசாயிகள்

பரமக்குடி, நவ.1:  பரமக்குடி அருகே கண்மாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் பரமக்குடி அருகே தவளைக்குளம் கண்மாய் ஒரே நாளில் நிரம்பியது. 10 வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கண்மாய்க்கு அதிகமான நீர்வரத்து இருந்ததால் கண்மாய் கரையில் நீர் கசிவு ஏற்பட்டது. கண்மாய் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி அருகில் உள்ள நகரமங்களம், பேரானேந்தல் கண்மாய்களுக்கு சென்றது. தகவலறிந்து சென்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறியதாவது:- தவளைக்குளம் கண்மாய் மூலம் 250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இக்கண்மாய் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரபடாததால் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. கனமழையால் இந்த கண்மாய் 10 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது. இந்த நிலையில் கண்மாய்க்கரை திடீரென உடைந்து தண்ணீர் வீணாகி உள்ளது.

உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் முழுவதும் வயல்வெளிகளில் நிரம்பியுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்குவதால் நெற்பயிர்கள் அழுகி வருகிறது. தேங்கிய தண்ணீரை அகற்றிய பின் விவசாயம் செய்வதற்குள் கண்மாயில் போதிய தண்ணீர் இல்லாமல் போய் விடும். மீண்டும் தண்ணீர் வந்தால் தான் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் குடிமராமத்து பணிகள் என்ற பெயரில் கண்மாய்கள் முறையாக தூர்வார படுவதில்லை. கரைகள், மடைகளை பலபடுத்தபட வில்லை. இதனால் மழை காலங்களில், கண்மாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவது வழக்கமாக உள்ளது. எனவே பரமக்குடி தாலுகாவில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : irrigation facility ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள...