×

டேங்கர் லாரிகளில் தூசுகளுடன் சுகாதாரமற்ற தண்ணீர் விற்பனை

சாயல்குடி, அக்.10:  துருப்பிடித்த டேங்கர்களில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் நடைபெறுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அதிகாரிகள் ஆய்வு ெசய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நிரந்தர குடிநீர் ஆதாரங்கள் இல்லாததால், பொதுமக்கள் டிராக்டர்கள், லாரிகளில் நகர் பகுதியில் வந்து விற்கப்படும் குடிதண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சில டேங்கரில் வரும் தண்ணீர் சுகாதாரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. நீண்டநாட்களாக டேங்கரை சுத்தம் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. போர்வெல் மற்றும் கிணறுகளில் இருந்து தண்ணீர் பிடிக்கும் டேங்கர் லாரிகள் பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு குடம் ரூ.5க்கு விற்பனை செய்து வருகின்றனர். நேரில் வந்து தண்ணீர் விற்பனை செய்வதால், யாரும் சுகாதாரத்தை பற்றி கவலை படாமல் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாரியின் டேங்கர்கள் துருப்பிடித்து இருப்பதாலும், முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதால், குடிநீர் டேங்கர்களில் பூஞ்சைகள், பாசிகள் வளர்ந்தும், இரும்பு துரு, துகள்கள், தூசுகள் கலந்து சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் டேங்கர்களில், நிரந்தரமாக இருப்பதால், அதன்மீது தொடர்ந்து தண்ணீர் பிடித்து வருவதால், தண்ணீர் சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனை வாங்கி குடிக்கும் பொதுமக்களுக்கு வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு செய்ய மறுக்கின்றனர் என புகார் கூறுகின்றனர். பெரும்பாலான டிராக்டர்கள் முதுகுளத்தூரிலிருந்து கமுதிக்கும், சாயல்குடியிலிருந்து கன்னிராஜபுரம் மற்றும் மேலச்செல்வனூருக்கு தண்ணீர் பிடிப்பதற்கு இரவு மற்றும் அதிகாலையில் சென்று வருகிறது. டேங்கர்களின் பின்புறம் அபாய விளக்கு, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாததால், எதிரே டேங்கர் டிராக்டர் செல்வது, தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சுகாதாரக்கேடு மற்றும் விபத்துகளை ஏற்படுத்தி வரும் டிராக்டர்கள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். டிராக்டர்களை பராமரிக்க வட்டார போக்குவரத்து துறை, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை