×

பரமக்குடி பகுதியில் மக்களை விரட்டி கடிக்கும் தெருநாய்கள் மவுனம் காக்கும் நகராட்சி

பரமக்குடி, செப்.26:   பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களின் தொல்லையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சமீப காலமாக அதிகளவில் வெறிநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் குழந்தைகள்,பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும், தெருக்களில் அச்சத்துடன் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் தெருக்களில் வருவோரை கடிப்பதும், விரட்டுவதை வாடிக்கையாகி விட்டது. தெருக்களில் கிடைக்கும் உணவுக்காக சண்டையிடும் தெரு நாய்கள் சாலையில் செல்பவர்களை மிரள வைப்பதுடன், சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களில் மோதி, வாகன ஓட்டிகளை கீழே தள்ளி விடுவதும் தொடர் கதையாகி விட்டது. வெறிநாய்கள் கடிப்பதால், ரேபிஸ் என்ற வைரஸ் கிருமி மனித உடல்பகுதிக்குள் சென்று உயிரை பறித்து விடுகிறது. வசதி படைத்தவர்கள் பணத்தை செலவு செய்து சிகிச்சை பெற்றுகின்றனர். வசதியில்லாதவர்கள் அரசு மருந்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் அரசு மருந்துவமனைகளில் போதுமான அளவு மருந்து இருப்பு இருப்பதில்லை. வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தை பாதித்து உயிரிழக்க செய்கிறது. இப்போது பரமக்குடி நகர் பகுதிகளான ஆற்றுபாலம், மஞ்சள்பட்டினம், காட்டுபரமக்குடி, ஒட்டபாலம், கிருஷ்ணா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய் மற்றும் வெறிநாய்கள் சாலைகளில் சுற்றிதிரிகிறது. இதுகுறித்து நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த காலங்களில் நகராட்சி பகுதிகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து எண்ணிக்கையை குறைக்க குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதில் நகராட்சி சுகாதாரத்துறை கவனம் செலுத்தாததால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரமக்குடி நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல், நகராட்சி சுகாதாரத்துறை செயல் இழந்து உள்ளதாக மக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர், ஆகையால் மாவட்ட நிர்வாகம் தெரு மற்றும் வெறிநாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : municipality ,area ,Paramakudi ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...