×

வருவாய்த்துறை, போலீஸ் துணையோடு இரவு, பகலாக மணல் கொள்ளை தடுத்து நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி, செப்.26: சாயல்குடி ஆற்றுப்படுகைகளில் இரவு,பகலாக மணல் கொள்ளை நடந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி, சாயல்குடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களின் ஒரே நீராதாரமாக விளங்குவது மலட்டாறு ஆகும். இங்கு தண்ணீர் புரண்டோடி பல வருடங்கள் ஆகி விட்டதால் ஆறு வறண்டும், கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் நல்ல மணல் வளம் உள்ளது. இப்பகுதியில் அரசு மணல் குவாரி இல்லாததால், கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தும் மணல் கொள்ளையர் கள் வருவாய்த்துறை, காவல்துறை துணையோடு இரவு, பகலாக மணல் அள்ளி கடத்தி வருகின்றனர்.
மலட்டாறு, குதிரைமொழி வரத்து கால்வாய், பூப்பாண்டியபுரம்,மூக்கையூர், கூரான்கோட்டை போன்ற ஆற்றுப்படுகைகளிலும், கன்னிராஜபுரம், நரிப்பையூர் போன்ற கடல் ஒட்டிய பகுதிகளிலும் சுமார் 10 அடிக்கு கீழ் ஆற்று மணல் இருக்கிறது. இதனை எவ்வித அனுமதியின்றி தோண்டி மணல் அள்ளி டிராக்டர், மாட்டு வண்டிகளில் கடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 5 ஊராட்சிகளின் சார்பில் போடப்பட்ட நீராதாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, சாயல்குடி பகுதியில் வருவாய்துறை, காவல்துறை துணையோடு மலட்டாறு பகுதியை மையமாக கொண்டு அதிகாலை முதல் நள்ளிரவு வரை மாட்டு வண்டிகள், டிராக்டர்களில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. தூத்துக்குடி சாலையிலுள்ள போலீஸ் செக்போஸ்ட், சாயல்குடி காவல்நிலையம் போன்ற பகுதியில் எவ்வித தடையும் இன்றி கடத்தல் மணல் செல்கிறது. விதிமுறைகளை மீறி பெரும் ஆழத்திற்கு மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
மணல் வளம் குறைவதால் மழை பெய்யும் காலத்தில் பொட்டல் தரையால் மழைத்தண்ணீர் தேங்காமல் வீணாக கடலில் போய் கலந்து விடுகிறது. இதனால் மழை பெய்தவுடன் விவசாய பணிகளை துவங்கினாலும் கூட, போதிய தண்ணீரின்றி விவசாயம் ஆண்டுதோறும் பொய்த்து வருகிறது. மணல் திருட்டு குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தால், மணல் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்தவர் குறித்து சொல்லி விடுகின்றனர்.
இதனால் மணல் கொள்ளையர்களால் விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். தொடர் மணல் கொள்ளையால் விவசாயம் பாதிக்கும் அபாயம் இருப்பதால் மணல் திருட்டை ஒழிக்க கலெக்டர், எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை