×
Saravana Stores

கமுதி அருகே கோவிலாங்குளத்தில் இடிந்து விழுந்த அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இரவில் பாராக பயன்படுத்தும் குடிமகன்கள்

சாயல்குடி, செப். 10: கமுதி அருகே கோவிலாங்குளம் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து திறந்த வெளியாக இருப்பதால் இரவு நேர பாராக சமூகவிரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி பேருந்து நிறுத்த நிழற்குடையும் இடிந்து தரைமட்டமானதால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். கமுதி அருகே கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களில் சில கட்டப்பட்டு பல வருடங்களாகி விட்டதால் கட்டிடங்கள் சேதமடைந்து வருகிறது. இந்நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. பள்ளி சுற்றுச்சுவர் ஓரத்தில் பெண்கள் மற்றும் ஆசிரியைகள் கழிப்பறை வளாகம் இருப்பதால் போதிய பாதுகாப்பின்றி உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால் வகுப்பறை நடக்கும் வேளையில் கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் வருவதால் மாணவர்களுக்கு அவற்றை விரட்டுவதிலேயே நேரம் செலவாகிறது.

மேலும் அருகிலிருக்கும் தெரு, சாலை குப்பைகள் பள்ளிக்குள் வருவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. இதுமட்டுமின்றி இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்கள் நுழையும் சமூகவிரோதிகள் பாராக மாற்றி வருகின்றனர். குடித்து விட்டு காலி பாட்டில்களை பள்ளிக்குள்ளேயே உடைத்து விட்டு செல்வதால் கண்ணாடி துகள்கள் மாணவர்களின் கால்களை பதம் பார்த்து வருகிறது, எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பள்ளிக்கு வெளியே உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையும் இடிந்து கிடக்கிறது. இதனால் மாணவர்கள் மழையிலும், வெயிலிலும் பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.பள்ளிக்கு குடிநீர் வசதியில்லாததால் குடிக்க தண்ணீரின்றியும், கழிவறைக்கு தண்ணீர் வசதியில்லாததால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொற்று நோய் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். எனவே பள்ளிக்கு தேவையான வகுப்பறை கட்டிடங்கள், கழிவறைகள், சுற்றுச்சுவர் மற்றும் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டி தரவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Citizens ,Kovilgangulam ,Kamuthi ,
× RELATED ரூ. 12,580 கோடி வளர்ச்சிப் பணிகள் 70...