×

சுய தொழில் துவங்க 44 பேருக்கு மானியத்துடன் ரூ.209.68 லட்சம் கடன் கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், ஜூன் 25:  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும்  தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்  மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்  கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் நேர்முகத் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தொழில் முனைவோரின் கல்வித் தகுதி மற்றும் தொழில்களின் சாத்தியக் கூறுகள், சந்தை வாய்ப்பு மற்றும் மேலாண்மை குறித்து நேர்காணலில் பரிசீலனை செய்யப்பட்டது.  இத்தேர்வுக் கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும்  தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு  பேப்பர் பை தயாரித்தல், பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரித்தல், மருத்துவ வசதி  போன்ற தொழில்களுக்கு ரூ.21.10 லட்சம் தமிழக அரசு மானியத்துடன் கூடிய ரூ.84.62 லட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பிரதம மந்திரியின்  வேலைவாய்ப்பு திட்டத்தின்  கீழ் 39 நபர்களுக்கு  கார் சர்வீஸ் சென்டர், ஆயுத்த ஆடைகள் தயாரித்தல், கேட்கிரில் தயாரித்தல், வெல்டிங் ஒர்க்ஸ், ஹாலோ பிளாக் தயாரித்தல், பாய்முடைதல், பனை ஓலையிலிருந்து தயாரிக்கப்படும் கூடை மற்றும் கைவினைப் பொருட்கள், பனைவெல்லம் தயாரித்தல் ஆகிய தொழில்களுக்கு ரூ.43.39 லட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.125.6 லட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம் சார்பில் 168 நபருக்கு பனை ஒலையிலான பாய் மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு தொழில்களுக்கு ரூ.33.95 லட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.97.75 லட்சம் வங்கிக் கடனாக  பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் தற்காலிக ஒப்பளிப்பு பெற்றவுடன் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு உரிய சான்றிதழ் பெற்ற பின் வங்கிக் கடன் பட்டுவாடா செய்யப்பட்டு பின்னர் அரசு மானியம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.

Tags : Rs ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...