×

திருவாடானை பகுதியில் கிராமங்களில் 10 மணி நேரம் மின்வெட்டு அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவாடானை, ஜூன் 12:  திருவாடானை அருகே கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்படுகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கோடை காலம் பிறந்துவிட்டாலே தமிழகத்தில் மின்வெட்டு துவங்கி விடுவது சில ஆண்டுகளாக வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல் ஆகிய தேர்தல் நடைபெறும் சமயங்களில் மட்டும் எந்த மின் தொகுப்பிலிருந்து வேண்டுமானாலும் அதிக விலை கொடுத்து வாங்கி மின் தடையின்றிப் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்து விட்டால், மீண்டும் மின்தடை விசுவரூபம் எடுத்து விடுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தல் நடந்து முடியும் வரை மின் தடையே இல்லாமல் இருந்தது. ஆனால் தேர்தல் தேர்தல் முடிந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக மின்வெட்டு நேரத்தை அதிகப்படுத்தி விட்டனர் மின்வாரிய அதிகாரிகள். அதுவும் திருவாடானை பகுதியில் நாளொன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்தடையை அமல்படுத்துகின்றனர். குறிப்பாக திருவாடானை அருகேயுள்ள ஆதியூர் அரும்பு குளத்தூர் திருவெற்றியூர் விளத்தூர் கொட்டகுடி போன்ற 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், தேர்தல் முடிந்தவுடன் இரண்டு மணி நேரத்தில் ஆரம்பித்த மின்வெட்டு படிப்படியாக கடந்த இரண்டு நாட்களாக பத்து மணிக்கும் மேலாக மின்தடை செய்யப்படுகிறது. இதனால் இந்த கிராமங்களில் சரியான நேரத்தில் மின் மோட்டாரை இயக்க முடியாமல் குடி தண்ணீர் விநியோகம் முழுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மின்விசிறி இயக்க முடியாமல் தூக்கம் கெட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கஷ்டப்படுகின்றனர்.

தற்போது கிராமங்களில் பெரும்பான்மையான வீடுகளில் கிரைண்டர் மிக்ஸி என அனைத்து மின்சாதனப் பொருட்களும் பயன்படுத்துகின்றனர். பகலில் மட்டும் 10 மணி நேரத்துக்கு மேல் மின்தடை உள்ளதால் எந்த மின் சாதன பொருட்களையும் இயக்க முடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மின்தடையை பகிர்ந்து செய்தால் ஓரளவு சிரமங்கள் குறையும். ஆனால் எங்கள் பகுதியில் தான் முழுமையான மின்தடையை திணிக்கின்றனர். எனவே மாவட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் அதிக நேரம் மின்தடை செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பாரபட்சமின்றி மின் வினியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : power supply officials ,villages ,Thiruvatanai ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்