×

வருவாய் சான்றிதழ் வழங்குவதில் மெத்தனம் தாலிக்கு தங்கம் கிடைக்காமல் ஏமாற்றத்தில் பெற்றோர்கள்

பரமக்குடி, ஜூன் 11:  பரமக்குடி தாலுகா அலுவலகத்தில், உரிய நேரத்தில் வருமான சான்றிதழ் வழங்காததால், தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தில், தகுதியான பயனாளிகள் பயன்பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் சமூக நலத்துறை மூலம் ஏழை பெற்றோரின் பெண்கள், விதவைத் தாயின் மகள், ஆதவற்ற பெண்கள், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள், மறுமணம் செய்யும் விதவைகள் ஆகியோருக்கு உதவும் வகையில், திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலைப் பட்டம், டிப்ளமா படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் மாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. அது போல் 10 மற்றும் 12 வகுப்பு படித்த ஏழை பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு தங்கம் 4 கிராம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2016ல் திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் பயனாளி ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு குறைவாக இருக்கவேண்டும். திருமண அழைப்புதழ், வருமானம், இருப்பிட சான்றிதழ் என அனைத்து ஆவணங்களையும் அருகில் உள்ள இ.சேவை மையத்தில் கொடுத்து விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வருமான சான்றிதழ்கள் சரியான நேரத்தில் கிடைக்காமல், தகுதியிருந்தும் இத்திட்டத்தில் பலனடைய முடியாமல் போவதாக பல பெற்றோர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன் இ.சேவை மையத்தில், வருமான சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் செய்கின்றனர்,ஆனால்,கிராம நிர்வாக அலுவலர்,வருவாய் ஆய்வாளர், தாசில்தார் என மூன்று நிலைகளை கடந்து, சான்றிதழ் கிடைக்க 20 நாட்களுக்கு மேல் ஆவதாக விண்ணப்பதாரர்கள் புலம்பி வருகின்றனர். இதனால் திருமண நாள் கடந்து வருமான சான்றிதழ் கிடைப்பதால், இந்த திட்டத்தில் பயனடைய முடியாமல் பெற்றோர் புலம்பி வருகின்றனர். வருவாய்த் துறையின் மெத்தன நடவடிக்கையால் தகுதியான பயனாளிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். சான்றிதழ்கள் விரைவாகவும், அலைச்சல் இல்லாமல் இருப்பதற்காகதான் இ.சேவை மையம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இங்கும் 10 நாட்களுக்கு பிறகு சான்றிதழ் கிடைப்பது வேதனையாக உள்ளது. சான்றிதழ் கிடைக்க காலதாமதம் ஆவதால், கையில் இருக்கும் ஆவணங்களை கொண்டு விண்ணப்பித்தால்,சமூக நலத்துறை அதிகாரிகளால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதுபோல் ஏராளமான விண்ணப்பங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் இந்த மாதம் 20க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை உரிய நேரத்தில் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏழை பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்