×

காதல் திருமணம் செய்ததால் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை ஆம்பூர் அருகே பரபரப்பு

ஆம்பூர், ஜூன் 11: ஆம்பூர் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால், தனது மகள் இறந்ததுவிட்டதாக தந்தையே பேனர் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், பால் வியாபாரி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் ஆம்பூர் அருகே உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளம்பெண் தொடர்ந்து காதலித்துள்ளார். இதனால் வேதனை அடைந்த அவரது பெற்றோர், மகளை கண்டித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டாராம்.

இதையறிந்த அப்பெண்ணின் பெற்றோர் மன வேதனை அடைந்தனர். தங்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட தனது மகள் இறந்து விட்டதாக பெண்ணின் தந்தை தனது குடும்பத்தினரிடம் கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை காதல் திருமணம் செய்த மகளின் படத்துடன் கூடிய கண்ணீர் அஞ்சலி பேனர் பெண்ணின் தந்தை மற்றும் குடும்பத்தினர் பெயரில் ஊரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பெண்ணின் தந்தையை சந்தித்து ஆறுதலுடன் அறிவுரையும் கூறியுள்ளனர். அதன்பிறகு ஒருசில இடங்களில் வைத்த பேனரை அவர் அகற்றியதாக தெரிகிறது. தனது மகள் காதல் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத வேதனையில் மகள் இறந்துவிட்டதாக பேனர் அடித்து ஊர் முழுவதும் வைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Daddy ,neighborhood ,Ambur ,
× RELATED சொத்து தகராறில் மருமகளை குத்தி கொன்ற...