×

பண்ணையில் 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின குடியாத்தம் அருகே பரிதாபம்

குடியாத்தம், ஏப்.25: குடியாத்தம் அருகே பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2,500 கோழிக்குஞ்சுகள் கருகின. குடியாத்தம் அடுத்த எஸ்.மோட்டூர் கிராமத்தில் சந்தோஷ் என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் கோழி குஞ்சுகளை வளர்த்து 6 மாதங்களுக்கு ஒருமுறை பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோழி இறைச்சி கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகிறார். அதன்படி, இவரது பண்ணையில் 2,500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் இவரது பண்ணையில் திடீரென மின்கசிவு நிகழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, பண்ணை முழுவதும் தீ பரவி அங்கு வளர்க்கப்பட்டு வந்த 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.
இதற்கிடையில் தகவலறிந்த குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சுமார் அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தகவலறிந்த குடியாத்தம் வருவாய்த்துறை, மின்துறை அதிகாரிகள் மற்றும் குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,500 கோழிக்குஞ்சுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பண்ணையில் 2,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின குடியாத்தம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Gudiatham ,Santosh ,S.Motoor ,
× RELATED குடியாத்தம் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து..!!