×

இளஞ்செம்பூரில் குடிநீர் இணைப்பின்றி காட்சி பொருளாக நீர்த்தேக்க தொட்டி

சாயல்குடி, ஜூன் 7:  கடலாடி அருகே இளஞ்செம்பூர் ஊராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் தேக்க தொட்டி, குழாய் இணைப்பின்றி காட்சி பொருளாக புதர்மண்டி கிடப்பதால், பொதுமக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். கடலாடி அருகே இளஞ்செம்பூர் பஞ்சாயத்தில் இளஞ்செம்பூர், பூக்குளம், கோகுல்நகர், காலனி, வீரம்பல் உள்ளிட்ட கிராமங்களில் 1,300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 612 மாணவர்களும், இளஞ்செம்பூர், பூக்குளம், வீரம்பல் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு குடிநீர் வழங்க கடந்த காலங்களில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் 4 கட்டப்பட்டது. காவிரி கூட்டு குடிநீர் இணைப்புடன் கூடிய தரைதள தொட்டியும், நீரேற்றும் அறையும் கட்டப்பட்டது. தொட்டி கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், போதிய பராமரிப்பரின்றி கடந்த இரண்டு வருடங்களாக பயன்பாடின்றி கிடப்பதால், கருவேல மரங்கள் அடந்து வளர்ந்து, புதர்மண்டி கிடக்கிறது. தொட்டியுடன் இணைக்கப்பட்ட பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின் மோட்டார்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் மாயமாகி உள்ளது.

இதனால் இந்த ஊராட்சிக்கு தண்ணீர் வராததால் அப்பகுதி கிராமமக்கள் சாலையோரம் செல்லக் கூடிய காவிரி கூட்டு குடிநீர் திட்ட ஏர்வால்விலிருந்து கசியும் தண்ணீரை பல மணி நேரம் காத்து கிடந்து அள்ளி, நெடுந்தூரத்திற்கு தள்ளுவண்டியில் தள்ளி வந்து, செல்லும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சேதமடைந்து கிடக்கும் தண்ணீர் தொட்டி, குழாய்களை மராமத்து செய்து, கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிதண்ணீர் வழங்க கடலாடி ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளஞ்செம்பூர் ஊராட்சி பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Poonamalle ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...