×

ராமநாதபுரம் நகர் பகுதியில் வீட்டு இணைப்பில் குடிநீர் திருட்டு 30 மின் மோட்டார்கள் பறிமுதல்

ராமநாதபுரம், ஜூன் 7: ராமநாதபுரம் நகராட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் தினமும் சுமார் 38 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகரில் பல தெருக்களில் முறையாக குடிநீர் வருவதில்லை என புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுப்பையா உத்தரவின் பேரில் காவிரி குடிநீா் இணைப்பு பெற்றுள்ள வீடுகளில் தண்ணீர் முறையாக சப்ளை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதில் நகரில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மோட்டார் மூலமாக தண்ணீர் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டது. உடனடியாக மோட்டார்கள் பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களை மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது சட்டத்திற்கு புறம்பானது என எச்சரித்தனர். நகராட்சி  அதிகாரிகள் கூறுகையில், நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் தினமும் சுமார் 38 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகராட்சி மக்களின் தேவைக்காக காவிரி  கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்திடமிருந்து ஆயிரம் லிட்டர் தண்ணீர் ரூ.9 என கட்டணம் செலுத்தி வாங்கி விநியோகிக்கிறது. வழங்கப்படும் குடிநீருக்கு மாத வரி கட்டணமாக வீடுகளுக்கு  ரூ100, வர்த்தக  நிறுவனங்களுக்கு ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு நகரில் விதியை மீறி குடிநீர் எடுத்ததாக 56 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மே மாதம் சிவஞானபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக நகரில் நடத்திய சோதனையில் தண்ணீர் திருட்டுக்காக பயன்படுத்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பவர்களை கண்காணித்து வருகிறோம். பறிமுதல் செய்த வீடுகளில் மீண்டும் மோட்டார் பொருத்தப்படுவது தெரிந்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, காவல்துறையினர் மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

பொதுமக்கள் கூறுகையில், காவிரி கூட்டு குடிநீர் பல பகுதிகளில் முறையாக வருவதில்லை. ஆனாலும் வரி வசூல் செய்கின்றனர். குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக சரி செய்யாமல் தண்ணீர் வீணாக தெருவில் ஓடுகிறது. காலை நேரத்தில் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருந்தால் வருவதில்லை. வரும் வழியில் ஏதாவது ஒரு வீட்டில் மோட்டார் போட்டு தண்ணீரை இழுத்து விடுவதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை. குடிநீர் திருட்டை தடுக்க இணைப்பு பெற்றுள்ள வீடுகளில் மீட்டர் பொருத்த வேண்டும். அப்போது தண்ணீர் எவ்வளவு செலவழிக்கிறார்களோ அதற்கேற்ற வகையில் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். மின்சார கட்டணம் போல 100லீ, 500லி, 100லி என கட்டணம் நிர்ணயித்தால் தண்ணீர் திருட்டு நடைபெறாது என்றார்.

Tags : area ,Ramanathapuram Nagar ,motors ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...