ராமநாதபுரம், ஜூன் 4: ராமேஸ்வரம் கடல் தொழிலாளர்கள் சங்க மாட்ட தலைவர் கருணா மூர்த்தி தலைமையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் அளித்த மனுவில், பாம்பன் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. கடல் பகுதியை ஒட்டியுள்ள 200க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள், மீனவப் பெண்கள் பல தலைமுறைகளாக தீவு பகுதியில் தொழில் செய்து வருகின்றனர். இத்தீவுகளில் ஆயிரக்கணக்கான தென்னை, பனை மரங்களும், பல வகையான பழ மரங்கள், மூலிகைச் செடிகள், காட்டுமரங்கள் நிறைந்திருந்தது. சுவையான குடிநீரும் இப்பகுதியில் கிடைத்தது.
இத்தீவுகளில் தங்கி மீனவப் பெண்கள் கடல் பாசி சேகரித்தும், கூடுகள் வைத்து மீன்களை பிடித்து வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் நண்டு வலை, முரல் வலை, சிங்கி வலை இவற்றைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இக்காலங்களில் தீவுகள் அனைத்தும் மீன்வள துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தது. கடந்த 1982ம் ஆண்டு மத்திய அரசு இத்தீவுகளை தேசிய கடல்சார் பூங்காவாக அறிவிப்பு செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தது. அன்று முதல் தீவுகளை நம்பி வாழ்ந்து வந்த மீனவர்கள், மீனவப் பெண்கள் வழக்கம் போல் தாங்கள் தொழில் செய்ய முடியாமல் வனத்துறை இடையூறு செய்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது மீனவர்கள் சார்பில் போராட்டம் நடத்தி வந்தோம்.
அக்காலகட்டங்களில் மட்டும் நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு மற்ற நேரங்களில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. பல ஆண்டு காலமாக தீவுகளில் இருந்த பனை, தென்னை உள்ளிட்ட மரங்கள் அழிந்து வருகிறது. பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட தோப்புக்காடு, சின்ன பாலம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, மரைக்கார் பட்டிணம் மற்றும் கீழக்கரையைச் பகுதியை சேர்ந்த பல கிராம மீனவர்கள் அன்றாடம் மீன்பிடி தொழில் செய்யும் குருசடித்தீவு, பூமரிச்சான் தீவு, புல்லி வாசல் தீவு, சிங்லி தீவு ஆகிய நான்கு தேர்வுகளை மையப்படுத்தி வனத் துறை நிர்வாகம் சுற்றுலா படகு சவாரி துவங்க உள்ளது.
அதனால் மீனவர்களை இப்பகுதியில் வருவதை தடை செய்யும் வகையில் மிதவைகளை போட்டு வைத்துள்ளது. இத்தீவுகளை நம்பி வாழ்ந்து வரும் ஒட்டுமொத்த மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புள்ளாகும். இச்சூழ்நிலையில் தாங்கள் உடன் தலையிட்டு தீவுகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மிதவைகளை அகற்றி வழக்கம் போல் தங்கள் வாழ்வாதாரத்தை தொடர மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களுக்கு வனத்துறை நிர்வாகம் எந்தவித இடையூறும் செய்யாமல் பாதுகாக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கருணாமூர்த்தி கூறுகையில், ‘‘வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளை சுற்றுலா தலமாக மாற்றி படகு சவாரி விட வனத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இனதால் 2 லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீனவர்களின் நியாயமான கோரிக்கையை மாட்ட நிர்வாகம் நிறைவேற்றும் என நம்புகிறோம். பூங்கா அமைப்பதால் மீனவர்களுக்கு பிரச்னை வராது என வனத்துறை அதிகாரிகள் கூறுவது மீனவர்களை ஏமாற்றி இந்த அரசு காதில் பூ சுற்றுவதுபோல உள்ளது. அதனால்தான் மீனவர்கள் காதில் பூ சுற்றி வந்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.
மிதவைகள் அமைக்கும் பணிகளை நிறுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் வரும் 10ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பாக மன்னார் வளைகுடா கடல் பகுதி சார்ந்த மீனவ கிராம மக்கள் தங்கள் மீன்பிடி வலைகள், மீனவர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை அனைத்தையும் ஒப்படைத்து தட்டை ஏந்தி பிச்சை எடுத்து காத்திருக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்றார்.