×

பரமக்குடி ரயில்நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம் தாங்க முடிய வில்லை...

பரமக்குடி, ஜூன் 4: பரமக்குடி ரயில் நிலையத்தில், கழிப்பறை பிரச்னை, கொசுத் தொல்லை, இரவு நேரங்களில் குடிமகன்களின் அட்டகாசம் உள்ளிட்டவற்றால் பயணிகளின் பாதுகாப்பும், சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பரமக்குடி ரயில் நிலையம் மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளை இணைக்க கூடிய ரயில் நிலையமாக உள்ளது.

பரமக்குடியை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களையும், இளையான்குடி, முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, சத்திரக்குடி, நயினார்கோவில் போன்ற முக்கியமான ஆன்மீக தலங்களை இணைக்க கூடியதாக உள்ளது. தினமும் மதுரை-ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட உள்ளூர் ரயில்களும், சென்னை, கோவை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், திருப்பதி, புவனேஸ்வர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் வந்து செல்கிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கில் பயணிகள் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.

தற்போது, ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக இரண்டாவது பிளாட்பாரம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதிகமான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் ரயில்வே நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது. கழிப்பறை, கொசு தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளை பயணிகள் சந்தித்து வருகின்றனர். பயணிகளுக்கென்று உள்ள கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் பல ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் கழிப்பறை அருகே மது அருந்தும் குடிமகன்கள், பாட்டில்களை கழிப்பறை வளாகத்திலேயே வீசிச் செல்கின்றனர். குடிமகன்களால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், கழிப்பறை இல்லாததால் பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகையால் ரயில்வே நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொறியாளர் பாலாமணி கூறுகையில், ‘‘இங்குள்ள கழிப்பறை கட்டி முடித்த பிறகு இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கழிப்பறையை சுற்றிலும் குடிமகன்கள் குடித்து விட்டு மதுபாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர்.

சில சமயங்களில், பாட்டில்களை உடைத்து விட்டு செல்வதால் பயணிகளின் கால்களை பதம்பார்த்து வருகிறது. இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் நோய் பரவும் அபாயமாக ரயில் நிலையம் உள்ளது. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கழிப்பறையை திறக்கவும், பயன்பாட்டில் இருந்த கழிப்பறைகளை பராமரிப்பு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும’’ என்றார்.

Tags : Citizens ,railway station ,Paramangudi ,
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து