ஊட்டி, மே 30: இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் இரு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா ஊட்டி லோயர் பஜார் அங்கன்வாடி மையத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது: தேசிய சுகாதாரக் கொள்கை 2017ன் நோக்கம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2016ல் 39ஆக இருந்ததை 2025ம் ஆண்டில் 23 ஆக குறைப்பதாகும். தமிழ்நாட்டில் தற்போதைய 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 19 ஆகும். 2023ம் ஆண்டுக்குள் இதனை 1000 பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்கு.
மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கான முக்கிய காரணங்களில் நிமோனியாவிற்கு அடுத்தப்படியாக குழந்தைகளின் இறப்பில் 10 சதவீதம் வயிற்றுப்போக்கு உள்ளது. நம் நாட்டில் ஆண்டிற்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் இத்தகைய வயிற்றுப்போக்கினால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பதை தடுக்கும் பொருட்டு அனைத்து தாய்மார்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களிடம் வயிற்று போக்கு தடுத்தல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து இருவார கால விழிப்புணர்வு முகாம் துவங்கப்பட்டு உள்ளது.
இம்முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் வரும் ஜூன் 8ம் தேதி வரை நடக்கிறது. இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 41 ஆயிரத்து 730 ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயனடைவார்கள், என்றார். முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
