×

குன்னூரில் வாட்டி வதைக்கும் பனி; பகலில் தீமூட்டி குளிர்காயும் மக்கள்

குன்னூர், ஜன. 1: குன்னூரில் வாட்டி வதைக்கும் பனியால் பகல் நேரத்தில் பொதுமக்கள் தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மாதம் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. அதன்பின்பு மழை குறைந்து, வெயிலும், குளிரும் இருந்து வருகிறது. தற்போது கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓட்டுப்பட்டறை, வண்டிச்சோலை, குன்னூர் நகர பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இரவு, பகல் என எந்நேரமும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. காலை நேரத்தில் தென்படும் சூரியஒளி காலை 10 மணிக்கு மறைந்து, மேகமூட்டமான காலநிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் பகல் நேரத்தில் கடும்குளிர் நிலவி வருவதையொட்டி மாலை 4 மணிக்கு பனிமூட்டமாக மாறி குளிர் அடிக்க தொடங்கி விடுகிறது. குளிருடன் பனியும் சேர்ந்து கொட்டி வருகிறது. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர தயக்கம் காட்டி வருகின்றனர். குளிருக்கு பயந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காலை நேரத்தில் கொட்டும் பனி மற்றும் கடும் குளிரால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பகல் நேரங்களில் பலர் தலையில் தொப்பி, பனியன் உள்ளிட்ட ஆடைகளை அணிந்துகொண்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சிலர் தோட்டங்களில் வேலைபார்க்கும் இடத்தின் அருகே விறகுகளை எரித்து தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டே பணியில் ஈடுபடுகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்வெட்டர், தொப்பி போன்றவற்றை அணிந்து தீ மூட்டு குளிர் காய்ந்து வருகின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட அதிகமாக குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் பலரும் மிகவும் சிரமடைந்து வருகின்றனர். இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையை நோக்கி படையெடுத்தும் வருகின்றனர்.

Tags : Coonoor ,Nilgiris district ,
× RELATED அறிவியல் செயல்பாடு குறித்து விளக்கம்