×

பரமக்குடி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

பரமக்குடி, மே 29: பரமக்குடி நகர் பகுதிகளில் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால், தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அரசு அலுவலர்கள் மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் அதிக மக்கள் வியாபார ரீதியாக வந்து செல்லும் பரமக்குடியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
 
இருப்பினும் நகராட்சியின் தொடர் சோதனையால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவுக்கு குறைந்துள்ளது. சில வியாபாரிகள்  துணிப்பை என்ற எண்ணத்தில் நான் ஓவன் எனப்படும் தடை செய்யப்பட்ட பைகளை பயன்படுத்தி வருகின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த வகை பைகளை தடை செய்தநிலையில், அதன் பாதிப்பு தெரியாமல் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், பாலிதீன் போன்றே, தயாரிக்கப்படும் நான் ஓவன் பைகள் மிகவும் மோசமான ஆபத்துகளை தரக்கூடியது. இதனால் மண் வளம் குறைவதுடன், நிலத்தடி நீருக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே ஆரம்பத்திலேயே பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன், தண்டனை கொடுத்தால் மட்டுமே முற்றிலும் தடைசெய்ய முடியும். ஆகையால் நகராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பை விற்பனையை தடுக்கவேண்டும் என்றார்.

Tags : area ,Paramakudi ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...