×

கடலாடி கோயில் திருவிழாவில் 4 பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் ஆப்பனூர், தூத்துக்குடி முதலிடம்

சாயல்குடி, மே 17: கடலாடி வனப்பேச்சியம்மன் கோயில், பொங்கல் திருவிழாவையொட்டி நான்கு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
கடலாடி கொண்டையுடைய அய்யனார், வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் கோயில் 9ம் ஆண்டு வருடாபிஷேகம் விழா நடந்தது. இதை முன்னிட்டு பூச்சிட்டு, சின்னமாடு, நடுமாடு, பெரியமாடு என நான்கு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

கடலாடி-சாயல்குடி சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரியமாடுகள் போட்டியில் 6 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் சித்திரங்குடி ராமமூர்த்தி மாடுகள் முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்டம், கடம்பூர் கருணாகர ராஜா மாடுகள் இரண்டாம் இடத்தையும், மருதூர் நாச்சியார் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்த நடுமாடு மாடுகள் பந்தயத்தில் 14 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. கடம்பூர் கருணாகர ராஜா மாடுகள் முதல் இடத்தையும், மதுரை மேலூர் மாடுகள் இரண்டாம் இடத்தையும், தங்கமாள்புரம் கார்த்திக் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றது. 4 கிலோ மீட்டர் சின்ன மாடு பந்தயத்தில் ஆப்பனூர் வேல்முருகன் மாடுகள் முதலிடத்தையும், எ.பாடுவனேந்தல் மாணிக்கவள்ளி மாடுகள் இரண்டாமிடத்தையும், எம்.கரிசல்குளம் வனப்பேச்சியம்மன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றது.

3 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூச்சிட்டு எனப்படும் புதிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கட்டை ராஜேஸ் மாடுகள் முதலிடத்தையும், ஒச்சதேவன்கோட்டை தங்கராஜ் மாடுகள் இரண்டாமிடத்தையும், எ.பாடுவனேந்தல் மகாதேவி மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. நான்கு பிரிவு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பணமும், குத்துவிளக்குகளும் பரிசுகளாக வழங்கப்பட்டது.

Tags : Athanur ,cattle race ,Thoothukudi ,temple festival ,Katalady ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது