×

வியாபார நிறுவனங்கள் ஓட்டலில் அதிரடி சோதனை பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

பரமக்குடி, மே 16: பரமக்குடி நகர் பகுதிகளில் முன் அறிவிப்பு இல்லாமல் அதிரடியாக வியாபார நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் சோதனை செய்த நகராட்சி ஆணையர் 78 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்தார். தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சார்பாக தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. பரமக்குடி நகராட்சி சார்பாக தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வியாபாரிகள், ஓட்டல்கள், கடைகளுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகின்றனர். இருந்த போதும், பரமக்குடி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யக் கூடிய அனைத்து கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று பரமக்குடி நகராட்சி ஆணையாளர் நாகராஜன் தலைமையில், சுகாதார அலுவலர் சன்முகவேலு, ஆய்வாளர்கள் பாண்டி, மாரிமுத்து, சரவணக்குமார், தினேஷ்குமார் ஆகியோர் எந்த அறிவிப்பும் இல்லாமல் வியாபார நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 78 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் விற்பனை செய்தால் சட்டப்படியாக கடும் தண்டனை கொடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Tags : firms ,
× RELATED ரூ3,000 கோடி முதலீடு, 50,000 பேருக்கு...