×

தேர்தல் விதிமுறையால் ஊராட்சி நிதிகள் முடக்கம்

சாயல்குடி, மே 14: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்றங்களின் நிதி முடக்கப்பட்டுள்ளதால், கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேள்விகுறியாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டிற்கு மேலாக உள்ளாட்சி நிர்வாகங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி தனி அலுவலர் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடந்து வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில், 424 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்நிலையில் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியை மாவட்ட நிர்வாகம் முடக்கி வருவதால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செலவு செய்வதற்கு நிதி ஆதாரம் இன்றி, கிராமங்களில் அடிப்படை வசதிகள் முடங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் கிராமங்களில் தண்ணீர் விநியோகம் செய்வது, குடிநீர் தொட்டி பராமரித்தல், சாலை, தெருவிளக்கு, பொது சுகாதாரம் பராமரிப்பு, கழிவுநீர், குப்பைகளை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல், குளோரின் மருந்துகளை தெளித்தல், கோடைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல், ஊராட்சி நிர்வாகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற சிறுசிறு வேலைகள் செய்யவும், தண்ணீர் தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், ஊராட்சியில் நிர்வாகத்தில் போதிய நிதியின்றி, செலவு செய்ய முடியாமல் கிராமங்களில் கடந்த மூன்று மாதமாக அடிப்படை வசதிகள் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டிற்கு மேலாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தனி அலுவலர் மூலம் நிர்வாகம் நடந்து வருகிறது. மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில், ஒவ்வொரு யூனியனிலுள்ள, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு தனி மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஊராட்சிகளை நிர்வகித்து வருகின்றனர்.

கிராமங்களில் எந்தவொரு சிறு பணி செய்வதென்றாலும் கூட, அனைவரின் அனுமதி பெற வேண்டும். இதற்கு தேவைப்படும் நிதியை முழுமையாக மாவட்ட நிர்வாகம் வழங்குவது கிடையாது. பல கிராம பஞ்சாயத்துகளுக்கு சொற்ப நிதி மட்டுமே உள்ளது. போதிய நிதி இன்றி, கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமல் படுத்தியதில் இருந்து முடிவுகள் வரும் வரை எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை. புதிய திட்டப்பணிகளும் வரவில்லை.

இதனால் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களில் முக்கிய அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால். கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான கிராம ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் வருவது கிடையாது. குடிநீர் தொட்டிகளில் ஏற்றாமல், பொது இடத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயிலிருந்து தண்ணீர் பிடித்தும், காவிரி குழாயிலிருந்து கசியும் நீரையும் பிடித்தும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வராத தண்ணீருக்காக, குடிநீர் வரி செலுத்தும் நிலை உள்ளது.

தற்போது கோடை காலம் துவங்கி விட்டதால் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாததால் ஊராட்சி செயலர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் இன்றி திண்டாடி வரும் சூழ்நிலையில், தேர்தல் விதிமுறை மற்றும் அரசு உத்தரவு எனக்கூறி மாவட்ட நிர்வாகம், ஊராட்சிகளின் இருக்கும் அனைத்து நிதி ஆதாரங்களையும் முடக்கி வருவகிறது. இதனால் கிராமங்களில் அடிப்படை வசதிகளும் முடங்கி வருகிறது. எனவே ஊராட்சிகளில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை