×

கேள்விகுறியான அடிப்படை வசதிகள் கீழக்கரை பகுதியில் சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு

கீழக்கரை, மே 14: கீழக்கரை புது கிழக்குத்தெரு பகுதியில் வீடுகட்டியுள்ளவர்கள் சாலையை 8 அடி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும், நடுரோட்டில் 5 அடிக்கு ஒரு மின்கம்பம் நடப்பட்டுள்ளதாலும் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆகவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை கிழக்குத்தெருவிலிருந்து பட்டாணி அப்பா தர்ஹா வழியாக புது கிழக்குத் தெருவிற்கு செல்லும் 18 அடி சாலை உள்ளது.

அப்பகுதியில் வீடு கட்டியுள்ளவர்கள் சாலையில் 8 அடிவரை எடுத்து அதில் வேலிகல்லை நட்டு மேலே ஷீட் போட்டு வீட்டுடன் சேர்த்து உபயோகபடுத்தி வருவதாலும், மீதமுள்ள 10 அடி சாலையின் நடுவே 5அடிக்கு ஒரு மின்கம்பம் நடப்பட்டு இருப்பதாலும் கல், மணல் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்ற வரும் வேன்கள் இப்பகுதியில் செல்வதற்கு கடும் சிரமம் ஏற்படுகிறது, இந்த மின்கம்பங்களில் மோதாமல் இருப்பதற்காக மற்றொருபுரம் வாகனங்களை ஒதுக்கினால் எதிரே உள்ள வீட்டின் சிலாப்பில் வாகனங்கள் மோதி சிலாப்புகள் சேதமடைந்து விடுகிறது, ஆகவே மாவட்ட கலெக்டர் உடன் இப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து லுக்மாயின் ஹக்கீம் கூறுகையில், இப்பகுதியில் 18அடி சாலை இதில் 8அடியை வீட்டுக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும் மீதமுள்ள சாலையின் நடுவே இரண்டு மின்கம்பங்கள் மிக அருகருகே 5அடி தூரத்தில் நடப்பட்டு உள்ளதாலும் சந்து பாதையில் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

இதுகுறித்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மின்வாரியத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நேரடியாக ஆய்வு செய்து செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அருகருகே உள்ள மின்கம்பங்களில் ஒரு மின்கம்பத்தை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : facilities ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி