×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே குடிதண்ணீருக்கே அல்லல்படும் மக்கள்

ஆர்.எஸ்.மங்கலம், மே 14: ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் ஏ.மணக்குடி ஊராட்சியில் உள்ள கிராமங்களான கண்ணாரேந்தல், மொச்சியேந்தல் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு வருட காலமாக குடிதண்ணீர் சப்ளை சரிவர இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தினசரி அனைத்து வீடுகளிலும் லாரி தண்ணீரையே வாங்கி பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. குழாய்கள் பதிக்கப்பட்டு காட்சி பொருளாகவே உள்ளது.

இந்த பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சரியான மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து மிகுந்த ஆழப்பகுதிக்கு சென்று விட்டது. இதனால் வீடுகளில் கண்மாய் குளங்களில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளிலும் தண்ணீர் ஊற்று நின்று விட்டது. இதனால் மக்கள் தினசரி ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.100ல் இருந்து ரூ.250 வரை விலைகொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பகுதியை சேர்ந்த சசிக்குமார் கூறுகையில், ‘எங்கள் கிராமங்களில் வசதியற்ற ஏழை, எளிய மக்கள் தான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். காரணம் 4 வருடங்களாக விவசாயம் விளையாமல் போனதால் சாப்பாட்டிற்கே அரிசி மற்றும் மளிகை சாமான்கள், காய்கறி போன்றவை வாங்கவே மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். இதில் குடிதண்ணீரும் பணம் கொடுத்து வாங்கிதான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது என்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து இந்த கிராமத்திற்கு சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் கருணை காட்ட வேண்டும்’ என்றார்.

Tags : RS Mangal ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாளை மக்கள் தொடர்பு முகாம்