×

பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை குழு கவனமாக பணியாற்ற வேண்டும் பொது பார்வையாளர் அறிவுறுத்தல்

வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை குழுவினர் கவனமாக பணியாற்ற வேண்டும் என பொதுபார்வையாளர் ஓம்பிரகாஷ் ராய் பேசினார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, 126 பறக்கும்படை குழுக்கள் போடப்பட்டு, வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளருக்கு பணம் விநியோகம் அதிகம் இருப்பதை அறிந்த பொது பார்வையாளர் கூடுதலாக 30 பறக்கும்படை குழுவை நியமிக்க உத்தவிட்டார். அதன்படி மொத்தம் 156 பறக்கும்படை குழுக்கள் போடப்பட்டுள்ளது. பறக்கும்படை குழுக்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொதுபார்வையளர் ஓம்பிரகாஷ் ராய் பேசும்போது, ‘‘இடைத்தேர்தல் என்றால், விதிமீறல் ஏற்படும் அதனை தடுக்க வேண்டும். கடந்த மாதம் 22ம் தேதி முதல் தற்போது வரை நீங்கள் பணியாற்றியதை விட இனிமேல்தான் கவனமாக பணியாற்ற வேண்டும். வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும்படையினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். விதிமீறல் தொடர்பாக புகார் பற்றி தகவல் வந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும்.

அப்போதுதான் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியும். விதிமீறும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் குறித்து, உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். வாகன சோதனையில் பிடிபடும் பொருள் மற்றும் பணத்தை உடனே கருவூலகத்தில் ஓப்படைக்க வேண்டும்’’ என்றார்.  இந்த கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன், பறக்கும்படை குழுவில் உள்ள அதிகாரிகள், போலீசார் இதில் கலந்து கொண்டனர்.  கூட்டுறவு துறையினர் விடுவிப்பு திருப்பரங்குன்றம் தொகுதியில், பறக்கும்படை குழுவில், கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு கீழே பணியாற்றும், கூட்டுறவுத்துறை அதிகாரிகளை பறக்கும்படை குழுவிற்கு நியமிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்கள் நியாயமாக பணியாற்ற முடியாது. அவர்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க கோரி திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பறக்கும்படையில் பணியாற்றி வந்த கூட்டுறவு துறையை சேர்ந்த 20 அதிகாரிகள் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வருவாய்த்துறையை சேர்ந்த துணை தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : team ,
× RELATED பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை...