×

கதறும் ஒப்பந்ததாரர்கள்

பரமக்குடி, மே 10: பரமக்குடி ஒன்றியம் உள்பட அனைத்து ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக அரசின் சார்பாக கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்கான பணிகளை வழங்கவும், கண்காணிக்கவும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் பஞ்சாயத்து அலுவலகத்தில் துவங்கி, வட்டார வளர்ச்சி அலுவலம், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் வரை பணிகளுக்கான தொடர்பு நீடிக்கிறது. இந்த சங்கிலி தொடர் அலுவகங்களில், கிராமப்புற வளர்ச்சி பணிகளில், கமிஷன் பிரச்னை சமீப காலமாக அதிகரித்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் கேட்கும், கமிஷன் குறிப்பிட்ட அளவு இருந்ததாகவும், ஆனால் சமீப காலமாக ஒன்றிய பெருந்தலைவர்கள் இல்லாததால் அவர்களின் கமிஷனை சேர்த்து கூடுதலாக கேட்பதாக கூறுகின்றனர். இதனால், பணிகளை முறையாக செய்ய முடியவில்லை என்கின்றனர். அதிகாரிகளின் நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என பல ஒப்பந்ததாரர்கள் புலம்பி வருகின்றனர்.

அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை போக, மீதி பணத்தில் செய்யப்படும் பணிகளின் தரம் மோசமாக உள்ளது. இந்தநிலையில், நிதியை விடுவிக்க 2 சதவீதம் கமிஷன் கேட்டு, ஒன்றிய அலுவலக அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் கூறும்போது, ‘மாவட்ட நிர்வாகம் வரை கமிஷன் தொகை செல்கிறது. அதற்கு ஏற்ப கமிஷன் தொகை கொடுத்தாக வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர். கடந்தாண்டு செய்த சில பணிகளுக்கான நிதி இன்றுவரை கிடைக்காமல் உள்ளோம். கமிஷன் விவகாரத்தால், நிதி விடுவிக்கவில்லை என ஒப்பந்ததாரர்கள் புலம்புகின்றனர். ஒரு பணிக்கான நிதியில் 30 சதவீதத்திற்கு மேல் அரசு அதிகாரிகளுக்கு போக, மீதமுள்ள பணத்தில்தான் வேலை நடக்கிறது. இதனால், பணிகள் மோசமாக நடக்கும் நிலையில், கூடுதலாக கமிஷன் கேட்பதால், சாலை மற்றும் கட்டிடப் பணிகளை மேலும், மோசமாக செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை