×

கீழக்கரை காவல்நிலையம் பின்புறம் இடிந்து விழும் நிலையில் காவலர் குடியிருப்பு

கீழக்கரை, மே 8: கீழக்கரையில் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர்களின் குடியிருப்பு கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் அடிப்படை வசதிகளும் அறவே இல்லாததால் காவலர்கள் வெளியில் வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர்.கீழக்கரை காவல் நிலையத்திற்கு பின்புறம் நான்கு கட்டடங்களாக போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முறையான பராமரிப்பு இல்லாததால் கடுமையான சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. இதனால் இங்கு காவலர்கள் தங்குவதற்கு அச்சப்படும் சூழலே உள்ளது, இந்த குடியிருப்புகள் அனைத்தும் இடிந்து விழும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளான தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கி தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் போதுமான பராமரிப்பு இல்லாததாலும் காவலர்கள் வெளியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் போலீசார் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும் வேளையில், அவர்களுக்கு அடிப்படை ஆதாரமான குடியிருப்புகளை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய அதிகாரிகளின் உதவியுடன்  இடிந்து விழும் நிலையில் உள்ள கீழக்கரை போலீஸ் குடியிருப்பை இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்கான மதிப்பீடு தயாரித்து அரசிடம் இருந்து தனி நிதி ஒதுக்கீடு பெற்று போலீஸ் குடியிருப்பினை தாமதமின்றி கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Police resident ,downstream ,downpour police station ,
× RELATED மப்பேடு அருகே கீழச்சேரியில் தீ விபத்தில் 20 குடிசை வீடுகள் எரிந்து சேதம்