×

ஜலகண்டாபுரம், ஓமலூர், காடையாம்பட்டி, மேச்சேரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; மரங்கள் முறிந்து விழுந்தன

ஜலகண்டாபுரம், மே 1: ஜலகண்டாபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் மின் தடை ஏற்பட்டது. ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளான சூரப்பள்ளி, ஆவடத்தூர், கரிகாப்பட்டி, தோரமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இரவு 8 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய துவங்கியது. சுமார் அரைமணி நேரம் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் ஓடுகள், சிமெண்ட் சீட்டுகள் காற்றில் பறந்தது. சூரப்பள்ளி கிராமம், குப்பம்பட்டி பகுதியில் மண்பானை தொழில் செய்து வரும் ஜனார்த்தனன்(28) என்பவரது வீட்டில் விற்பனைக்காக தயார் செய்து வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட பானைகள் மேற்கூரை உடைந்து விழுந்ததில் சேதமானது. அதேபகுதியை சேர்ந்த தறி தொழிலாளியான குணசேகரன் என்பவரது வீட்டின் ஓடுகள் உடைந்ததில் பல ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்கள் மழையில் நனைந்து வீணானது. மேலும் கிராம பகுதிகளில் சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கபட்டதுடன் மின் தடையும் ஏற்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஓமலூர்: ஓமலூர் வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுக்கு கோழிப்பண்ணைகள் பலத்த சேதமடைந்தது.  இதில், ₹15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார பகுதிகளில், கடந்த ஓராண்டாக மழை இன்றி வறட்சி நிலவி வருகிறது. மேலும், கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் நுங்கு, இளநீர் மற்றும் தர்பூசணி பழங்களை சாப்பிட்டு ஆசுவாசப்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. முன்பாக பலத்த காற்று வீசியது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், வீட்டின் கூரைகளும் காற்றில் பறந்தன. இதில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

இதேபோல், ஓமலூர் அருகே ஊ.மாரமங்கலம் மேல் காளிப்பட்டி பகுதியில், சசி என்பவரது தோட்டத்தில் கோழிப்பண்ணை அமைத்து 2 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்தனர். இந்தநிலையில், சூறைக்காற்றில் கோழிப்பண்ணை அடியோடு சாய்ந்தது. இதில் மரம், ஓடுகள் மற்றும் மின் சாதன பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் உடைந்து சேதமானது. இதன் மதிப்பு 15 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர்.காடையாம்பட்டி: காடையாம்பட்டி பகுதியில் நேற்று வீசிய சூறைக்காற்றுக்கு கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி அழகனம்பட்டி பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் மேற்கூரை பறந்தது. மேலும், அங்கிருந்த பால் அளவு கருவிகள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. ராஜசேகர் என்பவரது வீட்டின் மேற்கூரை அட்டைகளும் காற்றில் பறந்ததால் பலத்த சேதமடைந்தது.

Tags : Jalakandapuram ,Omalur ,Kathiyampatti ,
× RELATED ஓமலூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விற்பனை சரிவு!!