தோளூர் சமத்துவபுரத்தில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் அடையாளத்தை இழந்த பூங்கா

பரமக்குடி, ஏப்.25: பரமக்குடி அருகே தோளூர் சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா இருந்த அடையாளத்தை இழந்து கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்ய வேண்டிய ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பரமக்குடி அருகே உள்ள தோளூர் கிராமத்தில் திமுக ஆட்சியில் 100 வீடுகளுடன், ரேசன்கடை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் சமத்துவபுரம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த சமத்துவபுரம் பின்னர், வந்த அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால் சமத்துவபுரத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. சிறுவர்கள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்ட எந்த விளையாட்டு உபகரணங்களும் இல்லாமல், அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வீடு திரும்பியதும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட சிறுவர் பூங்கா தற்போது கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகள் படர்ந்து அடையாளம் தெரியாமல் உள்ளது.

சிறுவர் பூங்காவில் இருந்த விளையாட்டு பொருள்கள் மற்றும் உபகரணங்கள் மாயமானது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஆகையால் சிறுவர் பூங்காவில் உள்ள கருவேல மரங்களை மற்றும் செடி, கெடிகளை அகற்றி விளையாட்டு உபகரணங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>