×

பரமக்குடி அருகே கண்மாய் தூர்வாரும் பணியில் முறைகேடு

பரமக்குடி, ஏப்.25: பரமக்குடியில் பொதுப்பணித்துறை கண்மாயில் தூர்வாரும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக, அதிமுக பிரமுகர் மீது கிராமத்தினர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் தோளூர் கிராம ஊராட்சியில் தோளூர், தோளுர் தெற்குப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளது. இந்த ஊராட்சியில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 1,200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன கண்மாயாக தோளூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து வலது புறமாக பிரியும் கூத்தன்கால்வாய் மூலம் தண்ணீர் தேங்கப்பட்டு, பின்னர், பாசனத்திற்கு 3 மடைகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த பாறை முனியசாமி மணைவி லெட்சுமி இருந்துள்ளார். அப்போது வேளாண்மைத் துறை சார்பாக மாவட்ட நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் கண்மாய்களில் கால்வாய் அமைத்து தூர்வாரி கொடுப்பதற்கு ரூ.60 லட்சத்திற்கு மேல் வேலை எடுத்துள்ளதாக தெரிகிறது. தோளூர் கண்மாயில் 8 வடிகால்வாய் வெட்டுவதற்கு ரூ.16 லட்சம் வேலை எடுத்து பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கண்மாயில் எற்கனவே பொதுப்பணி துறையின் கீழ் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பொதுப்பணித் துறையினரிடம் அனுமதி பெறாமல் ஏற்கனவே நடந்த இடத்தில் மேல் மட்டமாக பெயரளவில் தூர்வாரியதாக கிராம மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

ஒரு ரீச் கால்வாய் என்பது 300 மீட்டர் நீளம், 10 அடி அகலம், 3 அடி ஆழம் என 8 ரீச் கால்வாய் 2.5 கிலோ மீட்டர் தூர்வாரப்பட வேண்டும். ஆனால் கால்வாய் துர்வாரப்படாமல் பாதி வேலையை பார்த்து விட்டு சென்று விட்டதாகவும், கிராமத்தினர் அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் சென்று புகார் கொடுத்தனர். இதனை அறிந்த ஒப்பந்ததாரர் முனியசாமி, அதிகாரிகளிடம் பணியை முடித்து கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் மீண்டும் துர்வாரும் பணியை செய்யாமல் வேலைக்கான பில் வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து கிராம தலைவர் ராமு கூறுகையில், கிராமத்திற்கு பாசனம் தரும் கால்வாயில் தண்ணீர் தேக்குவதற்கு கால்வாய் வெட்டி தருவதாக வேளாண்மை துறை சார்பாக 16 லட்சத்திற்கு மேல் ஒப்பந்தம் பெற்று வேலை செய்த பாறை முனியசாமி சரியாக பணி செய்யாமல் உள்ளார். ரூ.5 லட்சம் மதிப்புள்ள கருவேல மரங்களை வெட்டி அழித்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அவர்கள் வெட்டிய வடிகால்வாய் மீது கண்துடைப்பாக மேல் மட்டத்தில் வெட்டி விட்டு அதிகாரிகளை சரி செய்து பில் வாங்கி விட்டார்.

பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்மைத் துறை சார்ந்த மாவட்ட நீர்பிடி பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரிகளை பணம் கொடுத்து சரி செய்துள்ளனர். கண்மாய் வெட்டியதில் கிடைக்கும் மண்னை கொண்டு கரை பகுதியை உயர்த்தாமல், வெட்டிய இடத்தில் உயரத்தை காட்டுவதற்கு உள்ளேயே போட்டுள்ளனர். இதனால் மக்களின் வரிப்பணம் பல லட்சம் வீணானது. இந்த முறைகேடுகளை கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து கண்மாய் தூர்வாரும் பணியினை முழுமையாக முடிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் பாறை முனியசாமி கூறுகையில், ‘‘பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 6 கிராம ஊராட்சிக்கு இந்த திட்டம் பெறுவதற்கு வேளாண்மைத் துறை அதிகாரிகளை சரி செய்து தான் வேலை வாங்கினேன். பொதுப்பணித் துறையிடம் முன் அனுமதி பெறவில்லை. அதற்காக அதிகாரிகளை சரி செய்து விட்டேன். அதே வேளையில் பணிகள் முறையாக செய்து முடித்துள்ளேன். எந்த அதிகாரிகள் வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பில் கொடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொள்வேன்’’ என்றார்.

Tags : Paramakkadi ,
× RELATED பரமக்குடி அருகே கண்மாய் தூர்வாரும் பணியில் முறைகேடு