×

ஏர்வாடி தர்ஹாவில் திருடர்களிடம் பணத்தை இழக்கும் பக்தர்கள் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

கீழக்கரை, ஏப்.22: ஏர்வாடி தர்ஹாவிற்கு மகானை தரிசிப்பதற்காக வரும் பக்தர்களிடம் தொடரும் திருட்டு புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே கலெக்டர் ஏர்வாடி தர்ஹா காவல்நிலையத்தில் தனிப்படை அமைத்து திருட்டை ஒழிக்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏர்வாடியில் புகழ்பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒழியுல்லா தர்ஹா உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மகானை தரிசித்து விட்டு செல்கின்றனர். இதில் சிலர் தங்கியிருந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர், இந்நிலையில் நேர்த்தி கடனுக்காக தர்ஹாவில் தங்கி செல்பவர்களிடம் தினமும் யாராவது ஒன்று அல்லது இரண்டு பேர்களிடம் திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி விடுகின்றனர்.

இதனால் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் கொண்டு வந்த பணத்தையும், கைபையில் வைத்திருக்கும் ஏடிஎம் கார்டையும் தொலைத்து விட்டு சாப்பாட்டிற்கு மற்றும் ஊருக்கு திரும்பி செல்வதற்கு கூட பணம் இல்லாமல் செய்வதறியாது திண்டாடும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியை சேர்ந்த முகம்மது ஆரிப் என்பவரும், நேற்று முன்தினம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆபிதா உள்ளிட்ட ஏராளமானவர்கள் தினமும் ஏர்வாடி தர்ஹா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுவரை இதுசம்மந்தமாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்தும் வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏர்வாடி தர்ஹாவில் தனிப்படை அமைத்து திருடர்களின் அட்டூழியத்தை ஒழிப்பதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : devotees ,thieves ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...