×

மாவட்டத்தில் பரவலாக கோடையிலும் குளிர்வித்த மழை

ராமநாதபுரம், ஏப்.18: கோடைவெயில் கொளுத்தி வரும் நிலையில், நேற்று பகலில் திடீரென காற்று, இடியுடன் ராமநாதபுரம் பகுதியில் மழை கொட்டியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியே நிலவி வருகிறது. தினமும் 94 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு கடும் வெயில் கொளுத்தி வருகிறது. நீர்நிலைகள் வறண்ட நிலையில், மக்கள் குடிநீருக்கு அல்லாடும் நிலையில், நேற்று பகலில் திடீரென வானம் இருண்டது. காற்று, இடியுடன் மழை கொட்டியது. பகல் 12 மணி முதல் 1 மணி வரை பெய்த மழையால் சாலைகளில் மழை நீர்பெருக்கெடுத்து ஓடியது.வழக்கமாக சாலையோரங்களிலும், ஆயுதப்படை மைதானம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல தேங்கின. மழையால் தேர்தல் பணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்ட சாமியானா பந்தல்கள் சாய்ந்தன. பல இடங்களில் மரக்கள் வேரோடு முறிந்து விழுந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி பகுதியில் லேசான தூரலே இருந்தது. கமுதி போன்ற பகுதிகளில் மழை பெய்தது. மழை காரணமாக ராமநாதபுரம் நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால், வெப்பத்தின் தாக்கம் மிதமாகக் காணப்பட்டது.கமுதியில் திடீரென வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசத் துவங்கியது. கமுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் வாறுகால் சரியான பராமரிப்பு இல்லாததாலும், உடைந்து காணப்படுவதாலும், மழைநீருடன், சாக்கடை கழிவுநீர் கலந்து தெருக்களில் ஓடியது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிறுவர்கள் தெருக்களில் விளையாடும் போது சாக்கடை கழிவுநீரால் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இதனை சீர் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடந்த ஒரு மாதமாக தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடுமையான வெயில் தாக்கி வந்தது. கண்மாய் மற்றும் குளங்கள் முற்றிலும் வறண்டு விட்டதால் வெயிலின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தது. மதிய வேளையில் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் வீட்டில் முடங்கி கிடந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொண்டி, நம்புதாளை, முகிழ்த்தகம் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழை பெய்யது. மேலும் வெயிலின் தாக்கம் குறைந்த குளிர்ச்சி ஏற்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி எடுத்தது. பருவ மழை சரியாக பெய்திருந்தால் இவ்வளவு வெப்பம் இருந்திருக்காது. கோடை மழை காரணமாக ஓரளவு குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Tags : winters ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...