×

ராமநாதபுரம், பரமக்குடி தொகுதியில் இறுதிகட்டத்தில் அனல் பறந்த பிரசாரம்

பரமக்குடி, ஏப்.17: ராமநாதபுரம் பாராளுமன்றம், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று முடித்து கொண்டனர். தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்லுக்கான பிரசாரம் நேற்றுடன் தமிழகம் மற்றும் பாண்டிசேரியில் முடிவடைந்தது. பரமக்குடி சட்டமன்றத்திற்கான இடைதேர்தலில் திமுக சார்பாக சம்பத்குமார், அதிமுக சார்பாக சதன்பிரபாகர், அமமுக சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ முத்தையா, மக்கள் நீதி மய்யம் சார்பாக சங்கர் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

திமுக, அதிமுக, அமமுக சார்பில் ஒன்றியம், நகரம், வார்டு வாரியாக வெயிலை பொருட்படுத்தாமல் தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொண்டனர். கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், சமூக தலைவர்கள் என தினமும் காலை, மாலை என தேர்தல் களம் களைகட்டியது. பெண்கள் எந்த வேட்பாளர் வந்தாலும் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கடும் வெயிலில் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் கடுமையாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. திமுக சார்பாக தொகுதி பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன், சுப.த.திவாகர், திசைவீரன் ஆகியோர் தலைமையில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, நெசவாளர் அணி, போக்குவரத்து சங்கம், தொழில்நுட்ப அணி, இலக்கிய அணி என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பரமக்குடி முழுவதும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வேட்பாளர் சம்பத்குமாரை அழைத்து கொண்டு பிரமாண்டமான பிரசாரம் செய்தனர்.

அதிமுக சார்பாக இறுதிகட்ட பிரசாரமாக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி வேட்பாளர் சதன்பிரபாகர் ஆகியோருக்கு திறந்தவெளி வாகனத்தில் அமைச்சர் மணிகண்டன், பாஜக நிர்வாகி தேவநாதன், மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமையில் பரமக்குடி நகர் மற்றும் எமனேஸ்வரம் பகுதியில் வாக்கு சேகரித்தனர். அமமுக சார்பாக பரமக்குடி தொகுதி பொறுப்பாளர் கவிதா சசிக்குமார் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த், பரமக்குடி வேட்பாளர் முத்தையா ஆகியோர் கிருஷ்ணா தியேட்டரில் இளைஞர்கள் மற்றும் கட்சியினருடன் இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். அனைத்து கட்சியினரும் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால், நேற்று மாலை நடைபெற்ற இறுதி கட்ட பிரசார நேரம் முடிந்ததும், களப்பணி ஆற்றிய உச்சாகத்துடன் தேர்தல் பணியினை முடிந்து
கொண்டனர்.

Tags : Ramanathapuram ,Paramakudi ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...