×

ஆம்பூர் அருகே பரபரப்பு வாக்கு சேகரிக்க சென்ற அமமுக வேட்பாளர்கள் விரட்டியடிப்பு ‘எம்எல்ஏவாக இருந்து என்ன செய்தாய், ஊருக்குள் வராதே’

ஆம்பூர், ஏப்.17: எம்எல்ஏவாக இருந்து என்ன செய்தாய், ஊருக்குள் வராதே என ஆம்பூர் அருகே வாக்கு சேகரிக்க சென்ற அமமுக வேட்பாளர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் மக்களவை மற்றும் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் உட்பட 18 சட்டப்பேரைவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் அமமுக சார்பில் வேலூர் மக்களவை தொகுதிக்கு பாண்டுரங்கனும், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு ஜெயந்தி பத்மநாபனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தங்கள் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு இவர்கள் 2 பேரும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரம், துத்திப்பட்டு ஊராட்சிகளில் வாக்கு சேகரிக்க சென்றனர். ராமச்சந்திராபுரம் கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது பொதுமக்கள் ஒன்று திரண்டு 2 பேருக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெயந்தி பத்மபநாபனிடம், ‘நீங்கள் எம்எல்ஏவாக இருந்து எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. எங்கள் ஊருக்குள் நுழையக்கூடாது’ எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.இதையடுத்து ஜெயந்தி, ‘நான் ஒரு வருடம் மட்டுமே எம்எல்ஏவாக இருந்தேன். அதில், ஒரு ஆண்டு நிதி ₹2 கோடியை உங்களுக்கு செலவு செய்துவிட்டேன். இதுக்கு மேல் என்னால் எதுவும் செய்யமுடியாது. 5 ஆண்டு கொள்ளையடித்து இருந்தால் கேள்வி கேளுங்கள்’ என்றார். ஆனால் பொதுமக்கள் அவரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். அப்போது தன்னை கேள்வி கேட்ட ஒருவரை, ‘நீ என்னை எதுவும் கேட்காதே, உனக்கு பின்னால் இருப்பவர்கள் கேட்கட்டும்’ என்றார்.அதற்கு பொதுமக்கள் எல்லோரும் தான் கேள்வி கேட்கிறோம். நீங்கள் எங்கள் ஊருக்கு வரவேண்டாம், திரும்பிப்போகவும் என கோஷமிட்டனர். இதனால் வேட்பாளர்கள் ஜெயந்தி பத்மநாபனும், பாண்டுரங்கனும் வாக்கு சேகரிக்க முடியாமல் திரும்பிச்சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Amnesty ,Ambur ,town ,MLA ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...