வேலூர், ஜன.12: காட்பாடி அடுத்த திருவலம் அருகே கார் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கிருஷ்ணகிரியை சேர்ந்த கவுதம்(25), லோகேஷ்(24) ஆகியோர் முதுகலை படிப்பை படித்து வந்தனர். இதற்காக தனியாக அறை எடுத்து நண்பர்கள் 2 பேரும் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 2 பேரும் ஒரே பைக்கில் தங்கள் அறையில் இருந்து திருவலம் நோக்கி சென்றுள்ளனர். வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சந்திப்பில் சென்றபோது எதிரில் வந்த கார் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இதில் நண்பர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
