- காட்பாடி
- தொகுதி
- வனத்துறை?: பொது
- தலைமை பராமரிப்பாளர்
- மாவட்ட வன
- அதிகாரி
- வேலூர்
- காட்பாடி தொகுதி
- கவுண்டன்யா
- ஆந்திரப் பிரதேசம்
- தமிழ்-ஆந்திரப் பிரதேசம்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- திருப்பத்தூர்
வேலூர், ஜன.10: காட்பாடி வட்டார கிராமங்களில் 4 குட்டிகளுடன் 13 யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன், வீதிகளில் உலா வந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியான தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களை தொட்டு ஆந்திராவில் கவுண்டன்யா வனப்பகுதி அமைந்துள்ளது. யானைகள், சிறுத்தைகள் அதிகம் காணப்படும் இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் கூட்டம் தமிழக எல்லைக்குள் நுழைந்து சேலம், ஈரோடு வனப்பகுதிக்குள் செல்வதும், வேலூர், திருப்பத்தூர் வனப்பகுதியான ஜவ்வாது மலை வனப்பகுதிக்குள் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த சமயங்களில் கிராமங்களில் வாழைத்தோட்டங்களையும், கரும்பு தோட்டங்களையும், இதர பயிர்களையும் நாசம் செய்கின்றன. இதனால் சில நேரங்களில் எல்லை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள், யானைகள் புகுந்து சேதப்படுத்துவதை தவிர்க்க சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைக்கின்றனர். இதில் சில நேரங்களில் வனவிலங்குகள் மட்டுமின்றி மனிதர்களும் சில நேரங்களில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் ஆந்திர- தமிழக வன எல்லைப்பகுதிகளில் சோலார் மின்வேலி, அகழி வெட்டும் திட்டம் குறித்து வனத்துறை நீண்ட நாட்களாக பேசி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரதராமி, பனமடங்கி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், கடந்த 7ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் 4 குட்டிகள் மற்றும் 9 யானைகள் என மொத்தம் 13 யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஒட்டியும், கிறிஸ்டியான்பேட்டையை ஒட்டியும் சாலையை கடந்து மெட்டுக்குளம் நோக்கிச் சென்றன. யானைகள் தங்கள் வீதிகளில் அணிவகுத்து சென்றதை பார்த்த அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் அச்சமடைந்தனர். மேலும் தெருநாய்கள் யானைகளை பார்த்து உரக்க சத்தமிட்டு குரைத்தன. ஆனால் எதையும் சட்டை செய்யாமல் யானைகள் கூட்டம் காட்பாடி- சித்தூர் சாலையை கடந்து சென்றன.
தகவல் அறிந்து தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து, மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் காட்பாடி வனச்சரகர் கந்தசாமி மற்றும் 20 வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கொண்ட குழுவினர் பட்டாசுகள் வெடித்தும், சத்தம் எழுப்பியும் யானைகளை விரட்டும் பணியில் நேற்று அதிகாலை வரை ஈடுபட்டதுடன், தொடர்ந்து கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலம் தொடர்ந்து யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இரண்டு குழுக்களாக பிரிந்து காட்பாடியில் சுற்றித்திரிந்த யானைகள் கூட்டம் தற்போது பனமடங்கி, பரதராமி பக்கம் மீண்டும் சென்றுள்ளன. அனேகமாக அவை கவுண்டன்யா வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.
