- அமைச்சர்
- Duraimurugan
- திமுக
- பொங்கல்
- பொன்னாய்
- தமிழர் திருநாளான பொங்கல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
பொன்னை, ஜன.9: தமிழர் திருநாள் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைதமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும் பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியற்றுடன் ரொக்கம் ரூ.3,000 சேர்த்து வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் நேற்று தொடங்கி வைத்தார். அதனையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டம், சட்டமன்ற தொகுதிகளில் அமைச்சர், எம்எல்ஏக்கள் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.
அதில், வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதி மேல்பாடியில் நடந்த விழாவுக்கு வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். வேலூர் எம்பி கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை வரவேற்றார்.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரொக்கப்பணம் ரூ.3000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்து பேசியதாவது: கடந்த 1971ம் ஆண்டு இப்பகுதியில் நான் வாக்கு சேகரித்த போது மேல்பாடி பிர்கா எனக்கு பெரும் சவாலாக இருந்தது. பாதகமாக இருந்த இந்த ஊரை எனக்கு சாதகமாக மாற்றினேன். அப்போது முதல் தற்போது வரை மேல்பாடி பிர்கா எனது மனதிற்கு நெருக்கமான பகுதியாக உள்ளது. தற்போது திமுக அரசு சார்பில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆட்சி மீண்டும் தொடர இந்த திட்டங்கள் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் தான் அளித்த காட்பாடி தொகுதி சேர்க்காடு பகுதியில் 100 படுக்கை வசதி கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வந்தேன். அதேபோல் இந்த தொகுதி மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு செல்லும் நிலையை மாற்றி கடந்த ஆண்டு சேர்க்காடு பகுதியில் கலைக்கல்லூரியை கொண்டு வந்துள்ளேன். மேலும் மகிமண்டலம் பகுதியில் சிப்காட் அமையும் பணி விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த சிப்காட் இங்கு வாழும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு பெரும் உதவியாக இருக்கும். இப்பணிகளை தொடர வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேலூர் துணை மேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், காட்பாடி பகுதி செயலாளர் வன்னிய ராஜா, மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம் பெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரன், எருக்கம் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கோமதிசுதாகர், வள்ளிமலை ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அமைச்சர் துரைமுருகனிடம் வள்ளிமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காரவேல் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் பள்ளிக்கு சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்து தர வேண்டும் என கூறியிருந்தார்.
