×

சீட்டு பணத்தை திருப்பித்தராமல் நாயை ஏவி மிரட்டும் தவெக பிரமுகர் எஸ்பி குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு ரூ.8 லட்சத்து 26 ஆயிரம்

வேலூர், ஜன.8: சீட்டு பணத்தை திருப்பித்தராமல் நாயை ஏவி விட்டு மிரட்டும் தவெக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு நாள் கூட்டம் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், வேலூர் சத்துவாச்சாரி ஈஸ்வரன் கோவில்தெருவை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேர் கொடுத்த புகார் மனுவில், ‘நாங்கள் எங்கள் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரிடம், சீட்டு கட்டி வந்தோம்.

சீட்டு தவணை முடிந்த நிலையில், மொத்தம் ரூ.8 லட்சத்து 26 ஆயிரம் பணத்தை கேட்டால் தனது மகனிடம் பெற்றுக் கொள்ளுமாறு தந்தை கூறினார். தவெக பிரமுகரான அவரது மகனிடம் கேட்டால், பணத்தை தர முடியாது என்று கூறுவதுடன், வளர்ப்பு நாயை ஏவி விட்டு மிரட்டுகிறார். எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். வேலூர் கலாஸ்பாளையத்தை சேர்ந்த பெண் அளித்த புகார் மனுவில், எங்கள் பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவில் 10 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். எங்கள் குழுவை சேர்ந்த 8 பேர் வேலூர் கிளை இந்தியன் வங்கியில் வங்கிக்கடன் ரூ.75 ஆயிரம் பெற்றனர். இதில் நான் உட்பட 2 பேர் வங்கிக் கடன் பெறவில்லை. ஆனால் எனது வங்கி கணக்கை லாக் செய்துள்ளனர். வங்கியில் கேட்டதற்கு மகளிர் குழுவில் நீங்கள் இருப்பதால் உங்கள் வங்கி கணக்கை லாக் செய்துள்ளோம். இதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Tags : Vellore ,SP ,Mailvaganan ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...