×

உத்திரகோசமங்கையில் மங்களநாதர் கோயில் சித்திரை விழா துவக்கம்

ராமநாதபுரம், ஏப்.12: உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 19ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கையில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான மங்களநாத சுவாமி கோயிலில் உள்ளது. மங்களநாதர், மங்களகேஸ்வரி, சகஸ்ரலிங்கம், மரகத நடராஜர்என 4 சன்னிதிகள் உள்ளது. இக்கோயிலின் சித்திரை பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. காலையில் மங்களேஸ்வரி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. மேளதாளம் முழங்க சித்திரை பெருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடா்ந்து மங்களகேஸ்வரி அம்பாள் பிரகாரத்தில் எழுந்தருளினார்.

மாலை சுவாமி பூத வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தார். விழாவில் இன்று காலையில் பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏப்.17ம் தேதி காலையில் பல்லக்கில் சிவலிங்க பூஜை திருக்கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கும் நிலையிலும், இரவு தாமரை வாகனத்தில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் வரும் 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ஏப்.19ம் தேதி காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.20ம் தேதி காலையில் மங்கைப் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிந்தன் கோயிலுக்கு வரும் நிகழ்ச்சி மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது. அன்று மாலை தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

Tags : celebration ,Mananganathar Temple Chaitra ,
× RELATED உத்திரமேரூர் அருகே கலைஞர் பிறந்தநாள்...