×

கோட்டைகரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும்

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.10: தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என்றால், ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதி உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருவாடானை தாலுகா ஆகும். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் முற்றிலும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.தமிழகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய கண்மாய் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயாகும். இந்த கண்மாய் 1205 மில்லியன் கன அடி கொள்ளளவும் சுமார் 20 கி.மீ நீளமும் கொண்டதாகும். இந்த கண்மாய் நிறைந்தால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த பகுதியில் மழை காலங்களில் வெளியேறும் உபரி நீர் கோட்டைகரை ஆற்றின் வழியாக வீணாக கடலுக்கு சென்றடைகின்றன. இதனை தடுத்து விவசாயிகளுக்கு பயன் பெறும் வகையில் சனவேலிகோட்டை கரை ஆற்றின் குறுக்கே ஒரு அணையை கட்டினால் மழை காலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்கலாம். அவ்வாறு சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் தங்களின் விளை நிலங்களுக்கு பயன்படுத்தி விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும்.

ேமலும் இப்பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்பதில் ஐயமில்லை. எனவே நான்கு ஆண்டுகளாக மழை தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கோட்டைகரை ஆற்றில் குறுக்கே அணை கட்டி தந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அரசு எத்தனையே நலத்திட்டங்களின் பெயரில் அரசு நிதி முறையாக பயன்படுத்த படாமல் வீணடிக்கப்படுகின்றது. ஆனால் இந்த கோட்டைகரை ஆற்றின் குறுக்கே ஒரு அணையை கட்டி கொடுத்தால் விவசாயிகளின் வாழ்க்கை முன்னேறும். மிக்ஸி, கிரைண்டர், பேன் என இலவசப் பொருட்களை கொடுப்பதற்கு பதிலாக இதுபோன்ற நீர் தேக்க தடுப்பணைகளை கட்டியும், கண்மாய், குளம் போன்ற நீர் ஆதார நிலைகளை தூர் வாரி கொடுத்தாலே போதும் விவசாயம் செழிப்படையும்.விவசாயிகளும் நிம்மதியாக வாழ்வோம்.

இதனை செய்யாததால் தான் விவசாயிகள் நிவாரணத்தை தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் நிவாரணம் தேவை இல்லை. நிரந்தரமான தீர்வு வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கண்மாய்களை தூர்வாரவும், கோட்டைகரை ஆற்றில் குறுக்கே தண்ணீரை சேமிக்கும் விதமாக தடுப்பு அணை கட்டி தந்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும்’என்றனர்.

Tags : fortress ,
× RELATED 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்...