×

இந்திய இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் திமுக கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் அலுவலரிடம் மனு

ராமநாதபுரம், ஏப்.3: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம், மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கலெக்டர் வீரராகவராவிடம் சமூக வலைதளங்களில் தவறான முறையில் இந்திய இறையாண்மைக்கு எதிரான முறையில் பிரசாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். மனுவில், திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம லீக்  கட்சியின் வேட்பாளராக நவாஸ்கனி நிறுத்தப்பட்டுள்ளார். எங்கள் மதசார்பற்ற கூட்டணி கட்சி பிரசாரம், வாக்கு சேகரிப்பு தேர்தல் விதிமுறைப்படியும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிகாட்டுதல்படி அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். இதே தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியின் சார்பில் பிஜேபி கட்சி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணாக பிரசாரம் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் சிலர் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். எனவே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதள பிரசாரத்தை மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தகைய பிரசாரத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்துள்ளனர். அப்போது, கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் முருகபூபதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஷாஜகான், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரவீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, குணசேகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : nominee ,DMK ,Election Officer ,Indian ,
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்