×

காவிரி குடிநீர் கிடைக்காமல் சத்திரக்குடி கிராம மக்கள் அவதி

ராமநாதபுரம், மார்ச் 27: சத்திரக்குடியில் காவிரி குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அது முறைபடுத்தப்படாமல் உள்ளதால் பல ஊராட்சிகளில் தற்போதும் குடிநீர் பிரச்னை விசுவரூபம் எடுத்து வருகிறது. ராமநாதபுரம் அருகே போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீருக்காக மேல்நிலை தொட்டி கட்டப்பட்டும் கடந்த பல மாதங்களாக குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் உள்ளதால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெருக்களில் பைப் வசதி இருந்தும் குடிநீர் முறையாக வருவது இல்லை. இருந்த பைப்புகளும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல்நிலை தொட்டிக்கு செல்லும் பைப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் தொட்டிக்கு குடிநீர் செல்வது கிடையாது. கிராம மக்கள் பைப்புகளில் வழியும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வாரியத்தினர் கிராம மக்களின் நலன் கருதி விரைவில் காவிரி கூட்டு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவி நந்தினி கூறுகையில், காவிரி குடிநீர் வராததால் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டியும் பயனில்லாமல் உள்ளது. தொட்டிக்கு செல்லும் பைப்புகள் சேதமடைந்துள்ளால் தொட்டி நிறைவது கிடையாது. பைப்பில் வழியும் குடிநீரையே குடங்களில் எடுத்து வருகிறோம். அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை என்று கூறினார்.

Tags : village ,Cauvery ,
× RELATED பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!