×

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஏழுநிலை ராஜகோபுர பணிகள் விறுவிறுப்பு இறுதி நிலையை எட்டியது

மண்ணச்சநல்லூர், மார்ச் 14: தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி வழிபாட்டு தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மையானதாக கருதப்படுகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்பாளை வழிபட்டு செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு போதிய இடம், வசதி தங்கும் வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தததால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.  இதையடுத்து கோயிலை விரிவாக்கம் செய்யவும்,  பக்தர்களின் வசதிக்காக பல கட்டிடங்களை கட்டவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 5.7.2010 அன்று திருப்பணிகள் தொடங்கியது.அதன்படி கோயிலின் தெற்கு பகுதியில் புதிய முடி காணிக்கை மண்டபம், ஆடவர், மகளிருக்கான கழிவறை மற்றும் குளியல் அறைகள், சமயபுரம் கடை வீதியில் நவீன வசதிகளுடன் கூடிய பக்தர்களுக்கான புதிய தங்கும் விடுதி, பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக பள்ளிவிடை பாலத்தை ஒட்டி ஓய்வு கூடம் ஆகிய கட்டி முடிக்கப்பட்டு கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளது.அடுத்த கட்டமாக கோயிலின் வெளி பிரகாரத்தில் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளில் விரிவாக்கப்ப பணிகள், வடகிழக்கு பகுதியில் அபிஷேக அம்பாள் சன்னதி, அதன் அருகில் வசந்த மண்டபம், தென் கிழக்கு பகுதியில் விநாயகர் சன்னதி, அதையொட்டி நவராத்திரி மண்டபம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன.        

கோயிலின் கிழக்கு பகுதியில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ராஜகோபுரம் கட்டுமானப்பணி இறுதி நிலையான 7வது நிலையை அடைந்துள்ளது. 7 நிலை ராஜகோபுரத்தை உபயமாக கட்டிவரும் நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த உபயதாரர்கள் பொன்னர்,சங்கர்  தெரிவித்ததாவது:
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணியை நாங்கள் உபயமாக செய்து வருகிறோம். ராஜகோபுரம் பண்டைய மன்னர்கள் காலத்தைப்போல கட்டமைப்பில் கட்டப்பட்டு வருகிறது. 7 நிலை கோபுரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7 நிலை முடிவு பெறும் நிலையில் அதற்கு மேல் கலசங்கள் பொருத்துவது. பொம்மைகள் பொருத்துவது வர்ணங்கள் தீட்டுவது உள்ளிட்ட பணிகள் தொடங்கும். இன்னும் ஓரிரு மாதங்களில் 7 நிலை ராஜகோபுரம் முழுமையாக பணிகள் முடிந்துவிடும். 7 நிலை ராஜகோபுரம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சின்னமாக அமையும் என்று கூறினர்.

Tags : Samayalapuram Mariamman temple ,
× RELATED சாகுபடியில் 20% கூடுதல் மகசூல் ஈட்ட...