×

பார்த்திபனூர் செக்போஸ்டில் அடாவடி வசூல் வேட்டை அலறும் வாகன ஓட்டிகள்

பரமக்குடி, மார்ச் 6: பரமக்குடி அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் செக்போஸ்டில் போலீசார் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலோரத்தில் உள்ளதால் தேசிய அளவிலான பாதுகாப்பு முக்கியத்துவம் மிக்க மாவட்டமாக உள்ளது. இதனால் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டு இங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக மதுரை வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் விதமாக மாவட்ட எல்லையான பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் செக்போஸ்டு அமைக்கப்பட்டது.

இந்த செக்போஸ்டில் உள்ள போலீசார், சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள், வீதிமுறைகளை மீறும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை நிறுத்தி ஆவணம் சரிபார்பு என்ற ரீதியில் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் எஸ்.பி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போலீசார் இரவு,பகல் பாராமல் வெளிப்படையாகவே அதிரடியாக வசூல் செய்து வருகின்றனர். பணம் இல்லையென சொல்பவர்களிடம் வாகனத்தை நிறுத்தி பல மணி நேரம் காத்திருக்க வைத்து அனுப்பி வைக்கின்றனர் என வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.அதைபோல் டுவீலரில் வரும் நபர்களை பிடித்து ஹெல்மெட் அணியவில்லை என கூறி ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் என்ற பெயரில் வசூல் செய்கின்றனர். இதற்கு எந்தவிதமான ரசீதும் கொடுப்பதில்லை. இதுகுறித்து விபரம் கேட்கும் சிலருக்கு மட்டும் ரசீது வழங்கினாலும் போதுமான தகவல்கள் குறிப்பிடப்படுவதில்லை. இவ்வாறு தினமும் பலாயிரம் ரூபாய் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டுனர் ஆனந்த் கூறுகையில், பார்த்திபனூர் செக்போஸ்டில் போலீசார் எதற்கு எடுத்தாலும் பணம், எல்லா ஆவணங்கள் இருந்தாலும் செலவிற்கு பணம் கொடுக்கவேண்டும். இதைவிட கொடுமை வாகனத்தில் என்ன கொண்டு வந்தாலும் அவர்களுக்கு கொடுக்கவேண்டும். இல்லையெனில் அடுத்தநாள் வண்டியை விடாமல் நிறுத்தி விடும் கொடுமை உள்ளது.ஏதே சமூக விரோதிகளை நடத்துவது போல் ஒருமையில் வயது வித்தியாசம் இல்லாமல் பேசி மரியாதை குறைவாக நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களோடு தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது. முதலில் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை போலீசாருக்கு மாவட்ட காவல்துறை அறிவுறுத்த வேண்டும் என கூறினார்.

Tags : Participants ,
× RELATED வயது முதிர்ந்தவர்கள்,...